Published : 16 Jun 2023 11:32 AM
Last Updated : 16 Jun 2023 11:32 AM
கோவை: அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது விவாதப் பொருளானது. இந்நிலையில், அது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அஸ்வின்.
ஓவலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நமது அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்களிப்பும் உள்ளது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன், அப்போது சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.
கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. அப்போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என ஆடும் லெவனில் பவுலர்கள் இருந்தனர். அதுவே இந்த முறையும் அவர்களது எண்ணமாக இருந்திருக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதினேன்.
எனது திறன் குறித்து நான் அறிவேன். அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனக் கருதும் நிலையில் நான் இல்லை. எனது செயல்பாடு சரியாக இல்லை என்றால் அதன் முதல் விமர்சகர் நானாகத் தான் இருப்பேன். அது சார்ந்த பணிகளை நான் மேற்கொள்வேன்.
கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்துவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என் கையில் உள்ளது.
சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள். ஆனால், அதில் நான் உறுதியாக இல்லை. நான் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டி முடிந்ததும் எனது கவனம் டிஎன்பிஎல் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT