Published : 16 Jun 2023 08:44 AM
Last Updated : 16 Jun 2023 08:44 AM

நேஷனல் லீக் கால்பந்து தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது குரோஷியா

லூகா மோட்ரிக்

ரோட்டர்டாம்: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா அணி.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டம் ரோட்டர்டாம் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் குரோஷியா - நெதர்லாந்து அணிகள் மோதின. 34-வது நிமிடத்தில் டோனியேல் மாலன் அடித்த கோலால் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 55-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் நடுகள வீரராக லுகா மோட்ரிக்கை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து நெதர்லாந்து வீரர் காக்போ பவுல் செய்தார்.

இதனால் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆண்ட்ரேஜ் கிராமரிக் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 72-வது நிமிடத்தில் குரோஷியா 2-வது கோலை அடித்தது. லூகா இவானுசெக், நெதர்லாந்து அணியின் 4 டிபன்டர்களுக்கு ஊடாக தட்டி விட்ட பந்தை மரியோ பசாலிக் கோல் வலைக்குள் திணிக்க குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 90 நிமிடங்களின் முடிவிலும் இதே நிலையே இருந்தது.

இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் நோவாலாங் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

98-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் புரூனோ பெட்கோவிக் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் குரோஷியா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 109-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்டீவன் பெர்க்வின் இலக்கை நோக்கி வலுவாக அடித்த பந்தை குரோஷியா கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிக்கின் மீது பட்டு விலகிச் சென்றது. அதை கோல்கம்பத்தின் அருகில் நின்ற நோவா லாங் கோலாக மாற்றத் தவறினார்.

116-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் வைத்து குரோஷியா வீரர் புரூனோ பெட்கோவிக்கை, நெதர்லாந்து வீரர் டைரல் மலசியா பவுல் செய்தார். இதனால் குரோஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை 37 வயதான லூகா மோட்ரிக் கோலாக மாற்ற குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x