Published : 16 Jun 2023 03:31 AM
Last Updated : 16 Jun 2023 03:31 AM

"விஜய் சங்கர் மீது கோபம் அல்ல; அந்த லாஜிக் தான் புரியவில்லை" - 3டி க்ளாஸ் ட்வீட் குறித்து மனம் திறந்த அம்பதி ராயுடு

ஹைதராபாத்: 2019 உலகக்கோப்பையில் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை தொடர்பாக மனம்திறந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு.

தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தேர்வுக்குழு ரஹானே மாதிரியான அனுபவம் மற்றும் சீனியர் வீரர்களை தேர்வு செய்திருந்தால்கூட சரி எனலாம். ரஹானே போன்றோர் மிடில் ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் விஜய் சங்கர் அப்படியானவர் அல்ல. எல்லோருக்கும் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசைதான். அணியில் என்னை தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், எனக்கு மாற்றாக இன்னொரு வீரர் என்று வரும்போது அவர் அணிக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். இதுதான் எனக்கு கோபம் ஏற்பட காரணமே. மற்றபடி, விஜய் சங்கர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. விஜய் தனது கிரிக்கெட்டை விளையாடுகிறார். இதில் அவர் என்ன செய்திருக்க முடியும். அவரின் தேர்வுக்கு பின்னணி என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக்கோப்பையில் விளையாட அணியை தேர்வு செய்தார்களா அல்லது சாதாரண லீக் மேட்ச் விளையாட தேர்வு செய்தார்களா என்பதும் புரியவில்லை.

அணித் தேர்வு என்பது ஒருவரின் பணி அல்ல. அணி நிர்வாகத்துக்கு சிலபேர் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள்கூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஜென்டில்மேன் அணி தேர்வுக்குழுவில் இருந்தார். ஒருவேளை அவருக்கு என்னைப் பிடிக்காமல் போயிருக்கலாம் அல்லது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் என்னை அவருக்கு வேறுமாதிரியாக காட்டியிருக்கலாம். ஆனால், இதுமாதிரியான நபர்களால் எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு சுழற்சி போல் சுழன்றது எனலாம்.

3டி கண்ணாடி ட்வீட் செய்த பின், எல்லோரும் விஜய் சங்கரை குறிவைத்தனர். ஆனால் எனக்கு அந்த எண்ணம் இல்லை. அணிக்கு என்னை தேர்வு செய்ததன் காரணமும், லாஜிக்கும்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை மாற்ற வேண்டும் என முடிவு செய்துவிட்டால், என்னைப் போன்ற வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும். மாறாக, 6வது, 7வது வீரராக களமிறங்குபவரை எப்படி 4வது இடத்தில் களமிறக்க தேர்வு செய்தார்கள். உலககோப்பைக்கு முன்னதாக, நியூசிலாந்தில் அதே கண்டிஷனில் விளையாடி என்னை நன்றாக தயார் செய்திருந்தேன். ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை. அதையே ட்வீட்டாக பதிவு செய்தேன். விஜய் சங்கர் மீதும், எம்எஸ்கே பிரசாத் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. தேர்வுக்குழுவில் இருந்தவர்களே இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என அம்பதி ராயுடுவிரிவாக பேசினார்.

சம்பவத்தின் பின்னணி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு ஓராண்டு முன்பாகவே இந்திய பேட்டிங் வரிசையின் 4ம் இடம் பற்றிய கேள்வி பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி, 4ம் இடத்துக்கான கவலை தீர்ந்தது. ராயுடு அந்த நிலைக்குப் பொருத்தமானவர் என்று கூறினார்.

இதனால் உலகக்கோப்பையில் தான் ஆடப்போகிறோம் என்று எல்லா இந்திய வீரர்கள் போலவும் அவரும் கனவில் இருந்தார், ஆனால் திடீரென முப்பரிமாண ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ராயுடுவை விட ‘பெட்டர்’ என்று அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார்.

இதற்கு கிண்டலாக ராயுடுவும், தான் உலகக்கோப்பைப் போட்டிகளைப் பார்க்க புதிதாக 3டி கண்ணாடிகளை வாங்கியுள்ளேன் என்றார். பின்னர், ராயுடுவை உலகக்கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்து சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் ராயுடுவின் கரியரில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றுள்ள நிலையில், தற்போது இது தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x