Published : 15 Jun 2023 07:20 AM
Last Updated : 15 Jun 2023 07:20 AM
ஆக்லாந்து: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல் விலகி உள்ளார். கடந்த 9-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற தொழில்முறை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற போது பிரேஸ்வெல்லுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
குதிகால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக பிரேஸ்வெல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டுவதற்கு 6 முதல் 8 மாதங்கள் ஆகும் என்பதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து பிரேஸ்வெல் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்ற போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வில்லியம்சன் தொடரில் இருந்துவிலகினார். தொடர்ந்து காயத்துக்கு அவர், அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வது சந்தேகம் என்றே கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரேஸ்வெல் காயம் காரணமாக விலகி உள்ளது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணியில் அறிமுகமான ஆல்ரவுண்டரான பிரேஸ்வெல் 19 ஒருநாள் போட்டி, 16 டி20, 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
32 வயதான பிரேஸ்வெல் கடந்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரின் ஆட்டம் ஒன்றில் 78 பந்துகளில் 140 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருஅணிக்காகவும் களமிறங்கியிருந்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT