Published : 15 Jun 2023 06:53 AM
Last Updated : 15 Jun 2023 06:53 AM
புவனேஷ்வர்: இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி லெபனானுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு புவனேஷ்வரில் நடைபெறுகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 4 நாடுகள் கலந்துகொண்டுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் இன்று மோதுகிறது.
பிஃபா தரவரிசையில் லெபனான் 99-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி 101-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் பிஃபா தரவரிசையில் சீரான முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலமே தரவரிசையில் 100 இடங்களுக்குள் நுழைய முடிந்தது.
அதேபோன்றதொரு செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் இந்திய அணி வீரர்கள் தீவிர முனைப்பு காட்டக்கூடும். லெபனான் அணியை பொறுத்தவரையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் வனுவாட்டு அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த லெபனான், மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தது.
4 புள்ளிகளுடன் உள்ள லெபனான் இன்றைய ஆட்டத்தை டிரா செய்தாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வி அடைந்தால் சிக்கலை சந்திக்க நேரிடலாம். இந்தியா - லெபனான் போட்டிக்கு முன்னதாக மங்கோலியா - வனுவாட்டு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் மங்கோலியா வெற்றி பெற்றால் லெபனான் அணி கூடுதல் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT