Published : 14 Jun 2023 08:05 PM
Last Updated : 14 Jun 2023 08:05 PM
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலிய அணி வீரர்களே பிடித்துள்ளனர். 39 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் டாப் மூன்று இடங்களைப் பிடித்தது சாதனையாக பதியப் பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய வெற்றிக்குப் பிறகு வெளியான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 1984-ல் கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் ஆகியோர் டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட், 163 ரன்களை விளாசி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஸ்டீவ் ஸ்மித்தும் சதம் விளாசினார். இருவரும் சேர்ந்து 285 ரன்களை விரைவு கதியில் எடுத்ததே இந்தியாவின் தோல்விக்குப் பிரதான காரணம். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 48 மற்றும் 66 ரன்களை எடுத்து தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 36-வது இடத்திற்கு பிடித்துள்ளார்.
நேதன் லயன், இறுதிப் போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளால் 2 இடங்கள் முன்னேறி பவுலிங் தரவரிசையில் ஆலி ராபின்சனுடன் 6-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய வீரர்கள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் ரிஷப் பந்த் மட்டுமே உள்ளார். ரோஹித் சர்மா 12-வது இடத்திலும், விராட் கோலி 13-வது இடத்திலும் இருக்கின்றனர். என்னதான் தொடர்ந்து அயலக மண் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ரவிச்சந்திரன் அஸ்வின், பவுலிங் தரவரிசையில் இன்னும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கின்றார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இதிலும் அஸ்வின் 2-ம் இடத்தில் இருக்க, அக்சர் படேல் 4-ம் இடத்தில் இருக்கின்றார். மிட்செல் ஸ்டார்க் 8-ம் இடத்திலும், கம்மின்ஸ் 10-ம் இடத்திலும் இருக்கின்றனர்.
டாப் 10 டெஸ்ட் பேட்டர்கள்: லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட், டேரில் மிட்செல், திமுத் கருணரத்னே உஸ்மான் கவாஜா, ரிஷப் பந்த்
டாப் 10 பவுலர்கள்: அஸ்வின், ஆண்டர்சன், கமின்ஸ், ரபாடா, ஷாஹின் அஃப்ரிடி, ஆலி ராபின்சன்/நேதன் லயன், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, பிராட்.
டாப் 5 ஆல்ரவுண்டர்கள்: ஜடேஜா, அஸ்வின், ஷாகிப் அல் ஹசன், அக்சர் படேல், பென் ஸ்டோக்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT