Last Updated : 14 Jun, 2023 08:05 AM

1  

Published : 14 Jun 2023 08:05 AM
Last Updated : 14 Jun 2023 08:05 AM

மாற்றங்களுக்கு தயாராகும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி?

கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் எதிர்பார்த்ததை விட வேகமாக மாற்றங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது அல்லது தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட் அணி பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக இரு முறை ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த இரு தோல்விகளும் ரோஹித் சர்மா, விராட் கோலி,புஜாரா உள்ளிட்டோர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதை உணர்த்துவதாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரு தொடர்களுக்கான காலக்கட்டத்தில் இந்திய அணி மோசமான செயல்திறனை வெளிப்படுத்தவில்லைதான். இரு முறையும் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. ஆனால் தற்போது லண்டன்ஓவல் மைதானத்தில் முடிவடைந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் மிகுந்த சோர்வு காணப்பட்டது.

இந்திய வீரர்களிடம் இருந்து தீப்பொறி போன்றதொரு ஆட்டத்தை காண முடியவில்லை. உலகில் உள்ள அனைத்து அணிகளையும் வெல்லும் திறன் கொண்ட நிலையில் செய்த தவறுகளை மீண்டும் இந்திய அணி மேற்கொண்டது. வீரர்களின் செயல்திறன் ஒருபுறம் இருக்க, பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்களின் செயல்திறனும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. வீரர்கள் தேர்வில் வேகப்பந்து வீச்சை நம்பி, மட்டை வீச்சை இந்திய அணி கோட்டைவிட்டது.

பயிற்சியாளர் ராகுல் திராவிட், ஓவல் ஆடுகளம் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்படக்கூடியது அல்லஎன்று கூறுகிறார்.

அப்படி இருக்கும் போது வேகப்பந்து வீச்சில் ஏன் ஒழுக்கத்துடன் செயல்பட்டு ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது? போட்டி முடிந்த பின்னர் பல்வேறு கேள்விக்கணைகள் இந்திய அணி மீது பாய்ச்சப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்களை கொண்டுவருவதற்கான காலக்கட்டத்துக்குள் பயணிக்க வேண்டிய நிலைக்கு தேர்வாளர்களும், பிசிசிஐ-யும் தள்ளப்பட்டுள்ளது.

சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய 11 வீரர்களில் பெரும்பாலானோர் 35 வயதை எட்டும் நிலையில் உள்ளனர். இந்த வரிசையில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இருக்கின்றனர். அஜிங்க்ய ரஹானே, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் 35 வயதையும், கேப்டன் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 36 வயதையும் கடந்துவிட்டனர்.

அடுத்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் தற்போது 35 வயதை கடந்துள்ள வீரர்களின் உடற் தகுதி, செயல் திறன்அந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.இதுவே தற்போது இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவினரை சிந்திக்க தூண்டி உள்ளது. மாற்றம்என்பது விளையாட்டில் ஒரு தொடர்ச்சியான செயல்முறை மற்றும் இயற்கையானது. இந்தவகையில் நீண்ட கால செயல்பாட்டை கருத்தில் கொண்டு இளம்வீரர்களின் பக்கம் தங்களது பார்வையை திருப்ப தேர்வுக்குழுவினர் ஆயத்தமாகக்கூடும்.

உத்வேகத்துடன் உள்ள இளம்வீரர்களின் வரவானது அணியின் உணர்வையும் கட்டமைப்பையும் மாற்றும். இதனால் அனுபவம் உள்ள வீரர்களுடன் சரியான கலவையில் இளம் வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவினரின் முக்கிய பணியாக இருக்கும். இது எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் பிரதிபலிக்கக்கூடும்.

ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச அரங்கிற்கு நகரும் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த பாலமாக விளங்கும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், சீனியர் வீரர்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இது அவர், அபாயங்களை பொருட்படுத்தாதவர் என்ற தோற்றத்தை அளிக்கிறது. மேலும் சமீபகாலமாக இந்திய 'ஏ' அணியின் சுற்றுப்பயணங்கள் வறண்டுவிட்டன, ஐபிஎல் தொடரின் செயல்திறன் அடிப்படையில் வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்கின்றனர். இது வீரர்களின் செயல் திறனில் எதிர்பார்ப்பைவிட குறைவாக உள்ளது.

இந்தியா குறிப்பிட்ட வகை வீரர்களை உருவாக்க வேண்டும். பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடிய மிதவேக பந்து வீச்சாளர், இடது கை தொடக்க ஆட்டக்காரர், மற்றும் மிடில் ஆர்டர் இடதுகை பேட்ஸ்மேன், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆகியவை உள்ளடக்கிய கலவையாக இருப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக நவீன கால கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி துணிச்சலுடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தும் வீரர்களை அணிக்குள் புகுத்துவது காலத்தின் கட்டாயம். இதற்கான தூரம் வெகு தொலைவில் இல்லை.

தற்போதைக்கு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மட்டுமே உள்ளது. இதன் பின்னர் இந்திய அணி ஆண்டின் இறுதியில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதனால் மாற்றங்களை கொண்டுவருவதற்கான கால அவகாசம் தேர்வுக் குழுவினருக்கு அதிகமாகவே இருக்கிறது.

துணிச்சலுடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தும் வீரர்களை அணிக்குள் புகுத்துவது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x