Published : 13 Jun 2023 06:02 AM
Last Updated : 13 Jun 2023 06:02 AM
சென்னை: உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் இன்று மோதுகிறது.
சா்வதேச ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. போட்டிகள் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், நேரு பார்க்கில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமி உள்ளரங்க மைதானத்தில் இன்று (13-ம் தேதி) தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் எகிப்து,ஆஸ்திரேலியா, மலேசியா, கொலம்பியா அணிகளும் ‘பி’ பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. நாள்தோறும்4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
தொடக்க நாளான இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான்-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 1 மணிக்கு எகிப்து-ஆஸ்திரேலியா அணிகளும், 3.30 மணிக்கு மலேசியா-கொலம்பியா அணிகளும் மோத உள்ளன. மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் 16-ம் தேதி நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி 17-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரா் சவுரவ் கோஷல், வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுடன், இளம் வீரா் அபய் சிங், தன்வி கன்னா ஆகியோா் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT