Published : 13 Jun 2023 06:15 AM
Last Updated : 13 Jun 2023 06:15 AM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டலை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறினர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்தனர். எனினும் அவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர்.
இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகிகள் நீக்கப்பட்டு அந்த அமைப்பை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக்சங்கம் சிறப்பு குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் அழைத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான எப்ஐஆர் விவகாரத்தில் வரும் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் வரும் 30-ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும்அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் சம்மேளன தேர்தலில்போட்டியிட அனுமதிக்கக்கூடாது என வீராங்கனைகள் வைத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும்15-ம் தேதி வரை போராட்டத்தை தள்ளி வைப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜூலை 4-ம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தொடர்புடைய மாநில சங்கங்களுக்கு 21 நாட்கள் முன்பே அறிவிப்பு வழங்க வேண்டும் என்பதால் ஜூலை 4ம் தேதி தேதி தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் அதிகாரியாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 25 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தேர்தலில் கலந்து கொள்ள இரு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம். அவர்களுக்கு தலா ஒரு வாக்குரிமை வழங்கப்படும். இந்த வகையில் மொத்தம் 50 வாக்குகள் உள்ளன.
இந்திய மல்யுத்த சம்மேளன விதிகளின்படி, மாநில சங்கங்கள்தங்கள் நிர்வாக அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கும் பிரதிநிதிகளை மட்டுமே தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்க முடியும்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் முந்தைய நிர்வாகத்தில் துணைத் தலைவராக இருந்தார். அவர், உத்தர பிரதேச மல்யுத்த சங்கத்துடன் தொடர்புடையவர். அதேவேளையில் பிரிஜ் பூஷண் சரணின் மருமகன் விஷால் சிங் பிஹார் மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ளார். அவர்கள் இருவரும் மாநில அமைப்பு பிரதிநிதிகளாக போட்டியிட தகுதியானவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT