Published : 12 Jun 2023 03:28 AM
Last Updated : 12 Jun 2023 03:28 AM
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த நான்காண்டுகளில் கடினமாகவே உழைத்திருக்கிறோம். நிறைய போராடியிருக்கிறோம் என்று தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, "இந்த முடிவை ஏற்றுக்கொள்வது கடினம்தான். டாஸில் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது சரியான முடிவே. அதற்கேற்ப, முதல் இன்னிங்ஸின் முதல் செஷனில் நமது பவுலர்கள் நன்றாகவே பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் - ஸ்மித் இணைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர்.
இந்தியா சார்பிலும், முதல் இன்னிங்ஸில் நல்ல போராட்டம் வெளிப்பட்டது. ரஹானே - ஷர்துலின் பார்டனர்ஷிப்பால் மதிப்பான ரன்களை சேர்க்க முடிந்தது. சொல்லப்போனால் அதனாலேயே கடைசிநாள் வரை ஆட்டத்தில் எங்களால் உயிர்ப்போடு செயல்பட முடிந்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை, நிறைய பேசி, நிறைய திட்டங்கள் வைத்திருந்தாலும், அவற்றை சரியாக செயல்படுத்தவில்லை. சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசத் தவறிவிட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சை விட பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். மைதானம் பேட்டிங்கிக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தும் அதை எங்களின் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த நான்காண்டுகளில் கடினமாகவே உழைத்திருக்கிறோம். நிறைய போராடியிருக்கிறோம். அதனால்தான் இரண்டு முறை இதன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றோம். இப்போது தோல்விதான். அதேநேரம், தோல்வி அடைந்துவிட்டோம் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் சாதித்தவற்றை மறந்துவிட முடியாது. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம்." என்று தெரிவித்தார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோகித், "ஐபிஎல்லில் ஒரு கேட்ச் சர்ச்சையானால் கேமராக்களை பத்து கோணங்களில் சோதித்து முடிவு வழங்குகிறார்கள். ஆனால் ஐசிசி தொடரில் அதுபோன்ற விஷயங்கள் இல்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஒரு அணி கொடுக்கும் உழைப்புக்கு அதுதான் சரியானதாக இருக்கும்" என்று ஷுப்மன் கில் அவுட் சர்ச்சை உள்ளிட்டது குறித்து விரிவாக பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT