Published : 11 Jun 2023 05:13 AM
Last Updated : 11 Jun 2023 05:13 AM
ககாமிகஹாரா: மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பைஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் மூன்று பகுதியிலும் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்கப்படவில்லை. இரு அணிகளுக்கும் தலா 12 முறை பெனால்டி கார்னர் வாய்புகள் கிடைத்த போதிலும் அவற்றை சரியாக பயன்படுத்தத் தவறினர். 39-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. எளிதாக கோல் அடிக்க கிடைத்த இந்த வாய்ப்பை இந்திய வீராங்கனை அன்னு தவறவிட்டார்.
இறுதிப் பகுதியில் இந்திய அணியின் வீராங்கனைகள் துடிப்புடன் செயல்பட்டனர். 47-வது நிமிடத்தில் சுனேலிதா டாப்போ பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 58-வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கோல்கீப்பர் மாதுரி தனது அபார செயல்திறனால் ஜப்பான் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார்.
முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தென் கொரியா அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.
ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய மகளிர் அணி வரும் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சிலி நாட்டில் உள்ள சான்டிகோ நகரில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT