Published : 10 Jun 2023 01:48 AM
Last Updated : 10 Jun 2023 01:48 AM
மதுரை: சீனாவில் நடக்கும் உலக டோக்வாண்டோ போட்டியில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி மாணவி பங்கேற்கிறார். காமராசர் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக அவர் பங்கேற்பது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இவ்வாண்டுக்கான உலக போட்டிகள் சீனாவில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரையிலும் நடக்கிறது. இதையொட்டி, இப்போட்டியில் பங்கேற்கும் விதமாக பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு நடந்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ‘டேக்வாண்டோ’ போட்டிக்கான தேர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில், திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் எம்எஸ்டபிள்யூ படிக்கும் சேலம் மாணவி அனுசியா பிரிதர்ஷினி பங்கேற்றார்.
அவர் சிறப்பாக விளையாடி உலகப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் ஏற்கனவே அகில இந்திய போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார், உலக ‘டேக்வாண்டோ’ சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக உலக போட்டியில் பங்கேற்கும் முதல் மாணவியாக அனுசியா பிரிதர்ஷினி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவியை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஏ.மகேந்திரன், திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர், அமெரிக்கன் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் , மதுரை லேடிடோக் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சாந்தமீனா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
உலகப் போட்டியில் பங்கேற்க அவர் ஜூன் 23ம் தேதியே சீனாவிற்கு புறப்பட்டு செல்கிறார் என பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT