Published : 09 Jun 2023 02:08 PM
Last Updated : 09 Jun 2023 02:08 PM
மும்பை: எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்ய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜியோ சினிமா வழியில் ஹாட்ஸ்டாரும் பயணிக்கிறது. அதனால் பயனர்கள் சந்தா செலுத்தாமல் ஹாட்ஸ்டாரை மொபைல் போன்களில் பயன்படுத்த முடியும்.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் முழுவதையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்தது ஜியோ சினிமா தளம். இதன் மூலம் அந்த தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது. செயலியை டவுன்லோட் செய்வது முதல் நிகழ் நேரத்தில் போட்டியை பார்த்த பயனர்கள் எண்ணிக்கை வரை அனைத்தும் அதிகரித்தது. அதை கவனித்த ஹாட்ஸ்டார் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
“இந்தியாவில் வளர்ந்து வரும் ஓடிடி சந்தையில் முன்னணியில் உள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். நாங்கள் வழங்கி வரும் தனித்துவமிக்க பயனர் அனுபவத்தால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறோம். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் மூலமாக மேலும் பல பார்வையாளர்களை அடையும் நோக்கில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளோம். நிச்சயம் இந்த முயற்சி பெரிய அளவில் எங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம்” என டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஜித் சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமா தளம் தற்போது பயனாளர்களிடத்தில் சந்தா வசூலிக்க தொடங்கியுள்ளது. இதற்கான வருடாந்திர சந்தா ரூ.999 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2027 வரையில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா தளம்தான் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT