Published : 06 Oct 2017 11:47 PM
Last Updated : 06 Oct 2017 11:47 PM

யு-17 உலகக்கோப்பை: இந்திய இளம் வீரர்கள் போராடினர்; யு.எஸ்.ஏ. வெற்றி

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற யு-17 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவினாலும், ஆட்டத்தில் நல்ல போராட்ட உத்தியை வெளிப்படுத்தினர்.

இளம் கன்றுகளை ஆட விடும்போது எடுத்த எடுப்பிலேயே தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தக் கூறுவது ஒரு தவறான போக்குதான், காரணம், இளம் கன்றுகள் எதிரணியினருடன் மோதவே விரும்பும், யு.எஸ். அணி 5 கோல்கள் அடித்தால்தான் என்ன? திருப்பி 2 கோல்கள் அடிக்கும் போதுதான் தன்னம்பிக்கை வளரும், கோலை இலக்காக வைத்து ஆடும்போதுதான் வீரர்களுக்கு உடனடித்தன்மையுடன் கூடிய உத்தியும், திடீர் சாதுரியங்களும் பிறந்து ஆட்டத்தில் ஆக்ரோஷமும் வேகமும் கூடும், இந்த விதத்தில் எடுத்த எடுப்பிலேயே தடுப்பாட்டத்தில்தான் கவனம் செலுத்துவோம் என்று இந்திய பயிற்சியாளர் நேற்றே முடிவு கட்டிவிட்டார்.

மொழி லாவகமாக வரும் ஆனால் கருத்தளவில் பலவீனமாக திகழும் இளம் கவிஞர்கள் போன்றுதான் இவர்களும். எடுத்த எடுப்பிலேயே கருத்தில் கவனம் செலுத்தக் கூறும் ஆசிரியரால் இளம் கவிஞர்களின் மொழி லாவகத்தை அழிக்கத்தான் முடியுமே தவிர வளர்க்க முடியாது. ஆம்! கால்பந்தும் ஒத்திசைவும் வித்தியாசமும், ஆக்ரோஷமும், உத்தியும் கலந்த கவிதை மொழிதான். இங்கு எடுத்த எடுப்பிலேயே எப்படி கட்டுப்படுத்திக் கொள்வது என்பதை அறிவுறுத்தி, வலியுறுத்தினால் தன்னம்பிக்கை வளர்வது கடினம். ஆனால் 7 மாதங்களே ஆன ஒரு அணி இன்று வெளிப்படுத்திய ஆட்டம் எதிர்கால நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்தது என்பது உண்மையே.

கால்பந்தின் அடிப்படைகளான வேகம், பந்தை அதிகமாக தங்கள் வசம் வைத்திருப்பது, கோலாக வெற்றிகரமாக முடிப்பது ஆகியவற்றில் யு.எஸ். அணி இந்திய அணியின் திறமையை விட பல காத தூரம் முன்னே இருப்பது உண்மையே. தடுப்பாட்டத்தில் அதிக கவனமும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் தாக்குதல் ஆட்டம் குறைந்தது. இதனை அமெரிக்க அணி நன்றாகப் பயன்படுத்தியது. குறிப்பாக ஜோஷ் சார்ஜெண்ட் மற்றும் அயோ அகினோலா ஆகியோர். இதில் அகினோலா வலது ஓரத்தில் இந்திய அணிக்கு சீரான அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார்.

முதல் பாதி இறுதியில் இந்திய அணிக்கு கோல் வாய்ப்பும் கிட்டியது. அப்போது இந்திய வீரர் அனிகட் ஜாதவ், அமெரிக்க கோல் கீப்பருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டினார். இந்திய அணி தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அமெரிக்க அணி தங்கள் பகுதியிலிருந்தே தாக்குதல் உத்திகளை சுலபமாக வடிவமைத்தது. இவர்கள் என்ன செய்யப்போகின்றனர், எப்படி பந்தைக் கொண்டு வரப்போகின்றனர் என்பது பற்றி இந்தப்புறத்தில் இருக்கும் இளம் வீரர்களுக்கு கணிக்க முடியாமல் போனது.

மீண்டும் அனிகோலா, சார்ஜண்ட் இணை இந்தியப் பகுதிக்குள் பாக்ஸிற்குள் நுழைய ஜிதேந்திர சிங் தடுப்பை மீறி சார்ஜண்ட் பந்தை அடிக்க முயல, பதற்றமடைந்த ஜிதேந்திர சிங் ஃபவுல் செய்ய நேரிட்டது. பாகிஸிற்குள் ஃபவுல் செய்ததால் நடுவர் கெரி வர்கஸ் ஸ்பாட் கிக் கொடுத்தார். ஸ்பாட் கிக்கை அடித்த அமெரிக்க வீரர் சார்ஜண்ட் வலது மூலையில் பந்தை கோலுக்குள் திணித்தார். ஆட்டம் தொடங்கி 30 நிமிடத்தில்தான் அமெரிக்கா முதல் கோலை அடிக்க முடிந்தது.

இடைவேளைக்குப் பிறகு அமெரிக்க வீரர்கள் கிறிஸ் டர்கின், ஆண்ட்ரூ கார்ல்டன் ஆகியோர் கோல்களை அடித்தாலும் அது அமெரிக்க அணியின் ஆதிக்கம் மட்டுமே நிரம்பிய ஆட்டமாக இதனை வர்ணிக்க வைக்க இயலவில்லை.

இந்திய கோல் கீப்பர் மொய்ரங்தெ தீரஜ் சிங் நல்ல முறையில் கோல் கீப்பிங் செய்து சிலபல சேவ்களை நிகழ்த்தியதால் 3-0 என்ற அளவில் முடிந்தது.

இந்திய அணி 70 நிமிடத்திலிருந்து கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியது, அமெரிக்கப் பகுதிக்குள் நுழைந்து சில கலாட்டாக்களைச் செய்து சில பதற்றமான தருனங்களை அளித்தது கோமல் தாட்டல், இன்றைய சிறந்த இந்திய வீரர், ஒரு கோல் முயற்சியை மேற்கொண்ட போது பந்து இலக்கு தவறியது. 83-வது நிமிடத்தில் அன்வர் அலியின் அருமையான ஷாட் ஒன்று கிராஸ்பாரைத் தாக்கியது. முன்னதாக இடது புறத்தில் அருமையான மூவ் ஒன்றில் பந்தை வெட்டி எடுத்துச் சென்ற இந்திய வீரர் அமெரிக்க பாகிஸிற்குள் பந்தை பாஸ் செய்த போது அங்கு இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை.

இந்திய அணியில் முன் களத்தில் அனிகெட் ஜாதவ் என்ற ஒரே வீரரைத்தான் பயிற்சியாளர் டி மேட்டோஸ் வைத்திருந்தார்.

நிங்தோய்ங்கம்பா மீட்டி மற்றும் கோமல் தாட்டல் முறையே வலது, இடது ஓரங்களில் சில நல்ல மூவ்களை மேற்கொண்டனர், ஆனால் அவை அச்சுறுத்தலாக இல்லை.

முதல் பாதி முடியும் தருணத்தில் அனிகெட் அடித்த கோல் நோக்கிய ஷாட் அமெரிக்க கோல் கீப்பரிடம் நேராகச் சென்றது. 49வது நிமிடத்தில் தாட்டல் ஷாட் ஒன்று மேலே சென்றது.

இந்திய அணி கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியபோதுதான் அன்வர் அலியின் ஷாட் ஒன்று கிராஸ் பாரைத் தாக்கி திரும்பிய வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்க அணி எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். மீண்டும் தடுப்புக்குத் திரும்ப முடியாமல் போனதில் அமெரிக்க வீரர் கார்ல்டன் மிக அழகாக 3-வது கோலை அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் கானா அணி கொலம்பிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x