Published : 08 Jun 2023 08:16 AM
Last Updated : 08 Jun 2023 08:16 AM
ஹம்பன்தோட்டா: கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 116 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை அணி எளிதான இலக்கை விரட்டி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹம்பன்தோட்டாவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 22.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மொகமது நபி 23, இப்ராகிம் ஸத்ரன் 22, குல்பாதின் நயிப் 20, பரீத் அகமது 13 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் எவரும் இரட்டை இலக்க ரன்னை தொடவில்லை.
இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 4, வனிந்து ஹசரங்கா 3, லகிரு குமரா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 117 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிஷங்கா 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் திமுத் கருணரத்னே 45 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசினர்.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT