Published : 08 Jun 2023 08:24 AM
Last Updated : 08 Jun 2023 08:24 AM
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 14-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் ஹடாட் மியா ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபீர், 14-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியாவை எதிர்த்து விளையாடினார். சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பீட்ரிஸ் ஹடாட் மியா 3-6, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பீட்ரிஸ் ஹடாட் மியா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன் முறையாகும். கடைசியாக 1968-ல் பிரேசிலின் மரியா பியூனோ கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன் பின்னர் தற்போது பீட்ரிஸ் ஹடாட் மியா அரை இறுதியில் நுழைந்துள்ளார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-ம்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரை இறுதியில் ஜோகோவிச்-அல்கராஸ்
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 5-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் அல்கராஸ், 3-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். ஜோகோவிச் கால் இறுதி சுற்றில் 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 11- ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT