Published : 08 Jun 2023 01:05 AM
Last Updated : 08 Jun 2023 01:05 AM
ஹைதராபாத்: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள அம்பதி ராயுடு ஆந்திர அரசியலில் நுழைகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, வாழ்க்கையில் அடுத்த அத்தியாயமாக அரசியலில் கால்பதிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் அரசியலில் முக்கியமான நபர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கவுதம் கம்பீர், முகமது அசாருதீன் என பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தற்போது, அம்பதி ராயுடுவும் இதே பாதையை பின்பற்ற உள்ளதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், "படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த எண்ணம் தான், என்னையும் அரசியலில் நுழைய தூண்டுகிறது. சில கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்ததும், முடிவெடுப்பேன். கிரிக்கெட் வீரராக இருந்ததால் சிவில் சர்வீஸுக்குள் நுழைய வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. எனது முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பேன்" என்று அம்பதி ராயுடு வெளிப்படுத்தியதை மையப்படுத்தி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசியல் கட்சிகள் அவரை வளைத்துபோட போட்டிபோடுகின்றன.
அதில் முக்கியமானவை, தெலங்கானா காங்கிரஸ் மற்றும் ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். தெலங்கானா காங்கிரஸில் செயல்தலைவராக உள்ள முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர ராயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில், ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தும், ட்விட்டரில் ஜெகன்மோகன் பேச்சை சிறந்த பேச்சு என்று குறிப்பிட்டு, "ஆந்திர மாநிலம் முழுவதும் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது எங்கள் முதல்வர் அவர்களே" என்றும் புகழ்பாடியதை வைத்தும் ஊகங்கள் கிளம்பியுள்ளன. போதாக்குறைக்கு ராயுடுவின் உறவினர் அம்பதி ராம்பாபு ஜெகன் அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார்.
"ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அம்பதி ராயுடுவின் முடிவுக்கு காத்திருக்கிறது. ஆந்திராவின் குண்டூர்தான் ராயுடுக்கு சொந்த ஊர். அவரின் உறவினர் அமைச்சராக உள்ளார். இந்த இரண்டு காரணிகள் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் சேர அதிக வாய்ப்புள்ளதை காட்டுகிறது. அவர் காங்கிரஸில் இணைவார் என்ற நம்பிக்கையில்லை, காங்கிரஸில் இணையும் எண்ணமிருந்தால் ஏன் முதல்வர் ஜெகன்மோகனை சந்திக்க முயற்சிக்க வேண்டும்" என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் இந்த ஊகங்களுக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளார். மேலும், அப்படி ஒய்.எஸ்.ஆர் கட்சியில் இணைந்தால், அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் குண்டூர் தொகுதியில் சீட் வழங்கப்படலாம் என்ற பேச்சுகளும் அடிபட்டுள்ளன.
அதேவேளையில், காங்கிரஸ் சார்பில் ராயுடுவை கட்சியில் இணைக்கும் பொறுப்பு முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அவர் ராயுடுவிடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை காங்கிரஸில் இணைந்தால் லோக்சபா தேர்தலில் ஹைதராபாத்தின் புறநகர் தொகுதியான மல்காஜ்கிரி ஒதுக்கப்படலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், ஹைதராபாத்தில் வளர்ந்தவர் என்பதால் அம்பதி ராயுடு எந்த மாநில அரசியலில் கால்பதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எதிர்பார்ப்புக்கு அம்பதி ராயுடு தரப்பில் இதற்கு எந்தவித பதிலும் வெளிப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கோப்பை வென்றதை கொண்டாடி வருகிறார் ராயுடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT