Published : 06 Jun 2023 02:55 PM
Last Updated : 06 Jun 2023 02:55 PM
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தாவுடன், ஜார்ஜ் மெஸ்ஸி பேசியுள்ளார்.
“லியோ (மெஸ்ஸி) மீண்டும் பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார். எனக்கும் அவர் அதை செய்வதில் விருப்பம் உள்ளது. நிச்சயம் இந்த நகர்வை எங்கள் தரப்பில் முன்னெடுப்போம்” என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
‘அது அத்தனை எளிதான காரியம் அல்ல. இருந்தாலும் அதற்கான முயற்சிகள் எங்கள் தரப்பில் மேற்கொள்ளப்படும். அதற்கான சாத்தியங்களை நாங்கள் நிச்சயம் செய்வோம்’ என பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தா தெரிவித்துள்ளார்.
“லியோ அணிக்கு திரும்புவதை நான் அதிகம் விரும்புவேன். அதை நான் அவரிடமே தெரிவித்துள்ளேன். பயிற்சியாளர் என்று மட்டுமல்லாமல் ஒரு ரசிகனாகவும் இது அற்புதமானதாக இருக்கும். அவர் சிறந்த வீரர். பல்வேறு வழிகளில் அது எங்களுக்கு நிச்சயம் உதவும். இந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். எது நடந்தாலும் நான் அதை புரிந்து கொள்வேன்” என பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஜாவி தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸியை சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி மற்றும் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணி வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்.
மெஸ்ஸியும் பார்சிலோனாவும்: உயிரும் மூச்சும் போல பார்சிலோனா அணியும் மெஸ்ஸியும். அவர் அர்ஜென்டினா நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும் பார்சிலோனா அணிக்காக விளையாடுவதை பெரும்பாலான ரசிகர்கள் நாடுகளை கடந்து ரசிப்பது வழக்கம். மெஸ்ஸிக்கும் பார்சிலோனாவுக்கும் இடையேயான பந்தம் சுமார் 21 ஆண்டு காலம் நீடித்தது.
மெஸ்ஸி பதின்ம வயதை எட்டியதும் தொடங்கிய பந்தம் அது. சரியாக தனது 13-வது வயதில் பார்சிலோனா கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்தார். அன்று தொடங்கிய பயணம் ஜூனியர், பார்சிலோனா சி, பார்சிலோனா பி மற்றும் பார்சிலோனா சீனியர் என தொடர்ந்தது. சிறு வயதில் மெஸ்ஸி எதிர்கொண்ட வளர்ச்சி குறைபாடுக்கு தேவையான சிகிச்சைகளை கவனித்துக் கொண்டதும் அந்த அணி தான்.
அந்த அணிக்காக 520 போட்டிகள் விளையாடி 474 கோல்கள் (சீனியர் அணி) ஸ்கோர் செய்துள்ளார் மெஸ்ஸி. அவரது அசாத்திய ஆட்டத்தை கண்டு பிரசித்தி பெற்ற பல கால்பந்தாட்ட கிளப் அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய முயன்றன. ஆனால் அதை மெஸ்ஸி பலமுறை மறுத்துள்ளார்.
அத்தகைய சூழலில்தான் மெஸ்ஸிக்கு வழங்கப்படும் ஊதியத்தை நிதி சுமையை காரணம் காட்டி 2021-22 சீசனில் ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என பார்சிலோனா தெரிவித்தது. அப்போது பார்சிலோனாவை விட்டு விலக உள்ளதாக மெஸ்ஸி அறிவித்தார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக 2 ஆண்டு காலம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அது நிறைவடைந்துள்ளது. அந்த அணியில் இருந்து மெஸ்ஸி விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT