Published : 06 Jun 2023 02:43 AM
Last Updated : 06 Jun 2023 02:43 AM

WTC Final | நன்றாக விளையாடும் வரை அணியில் இடமுண்டு - ரஹானே குறித்து திராவிட்

ஓவல்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (7-ம் தேதி) லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றும்.

போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். இந்திய அணியில் 18 மாதங்களுக்கு பிறகு இடம்பெற்றுள்ளார் மூத்த வீரர் அஜிங்கிய ரஹானே. 18 மாதங்களில் முதல் டெஸ்ட் என்பதால் இதில் மோசமாக செயல்படும்பட்சத்தில் அது ரஹானேவின் கேரியருக்கே முடிவாக வரலாம்.

எனினும், "நடந்தவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கடந்த காலத்தைப் பற்றி நினைக்கப் போவது இல்லை. நான் புதிதாக ஆரம்பித்து என்ன செய்துகொண்டிருந்தேனோ அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினேன். அதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன் குவித்ததால் அதிக நம்பிக்கை கிடைத்துள்ளது. அந்தப் போட்டிகளில் விளையாடியது போன்றே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்" என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் ரஹானே.

இந்நிலையில் ரஹானேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் சில அறிவுரைகளை கூறியுள்ளார். "இந்திய அணியில் ரஹானேவும் மீண்டும் இடம்பிடித்திருப்பது நல்லது. சில வீரர்களின் காயங்கள் அவர் மீண்டும் அணிக்கு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். எனினும், அவரது விளையாட்டின் தரம் இந்திய அணிக்கு மிக உதவும். நிறைய அனுபவங்கள் மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய வீரரும்கூட. இங்கிலாந்தில் கூட அவர் இந்திய அணிக்காக சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடியவர்.

சில நேரங்களில் நீங்கள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வருவீர்கள். நீங்கள் நன்றாக விளையாடும் வரை மற்றும் நீங்கள் செயல்படும் வரை இங்கே உங்களுக்கு இடமுண்டு. காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், என்ன நடக்கும் என்று தெரியாது. எனது பார்வையில், இது உண்மையில் இந்தப் போட்டியைப் பற்றியது மட்டுமல்ல. இந்தப் போட்டி முக்கியமானதுதான். ஆனால் அதைவிட பெரிய சூழல்கள் உள்ளன. இன்னும் பல காலங்கள் அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதற்கேற்ப ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்" இவ்வாறு ரஹானேவுக்கு அறிவுரை கூறியுள்ளார் திராவிட் .

இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 4,931 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 2021-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரஹானே இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தொடரையும் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x