Published : 05 Jun 2023 04:04 PM
Last Updated : 05 Jun 2023 04:04 PM

இன்ஸ்டாவில் சர்ச்சை ‘ஸ்டோரி’யை பகிர்ந்து நீக்கிய பின் மன்னிப்புக் கோரிய யஷ் தயாள்

சர்ச்சைக்குரிய இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் யஷ் தயாள்

அலகாபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் யஷ் தயாள். 25 வயதான அவர் இன்று இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையிலான ஸ்டோரி ஒன்றை பகிர்ந்தார். அது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது. வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான அந்த ஸ்டோரியை பலரும் காட்டமாக விமர்சித்தனர். தொடர்ந்து அதை நீக்கிய யஷ் தயாள், அதற்காக மன்னிப்பும் தெரிவித்தார்.

யஷ் தயாள் பகிர்ந்த பதிவில் ஆண் ஒருவர் தனது முதுகில் கத்தி ஒன்றை மறைத்து வைத்துள்ளார். அதோடு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிக்கிறார். ‘லவ் ஜிகாத் என்ற ஒன்று இல்லவே இல்லை. அது வெறும் பிரச்சாரம்தான். நான் உண்மையில் உன்னை காதலிக்கிறேன்’ என்கிறார் அந்த ஆண் நபர். ‘எனக்கு தெரியும் அப்துல். நான் உன்னை கண்மூடித்தனமாக நம்புகிறேன்’ என அந்தப் பெண் சொல்கிறார். அந்தப் பெண் தனது கண்களை கட்டிக் கொண்டுள்ளார். அந்த இடம் முழுவதும் கல்லறைகளாக உள்ளன. அதில் பெண்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிஜ பெயர்களும் இந்தக் கல்லறையில் இடம் பெற்றுள்ளன. இதுதான் நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. இது ஒரு கார்ட்டூன் படம்.

“நண்பர்களே நான் பதிவு செய்த ஸ்டோரிக்காக என்னை மன்னிக்கவும். அது தவறுதலாக பதிவிடப்பட்டது. தயவு செய்து வெறுப்புணர்வை பரப்ப வேண்டாம். நன்றி. அனைத்து சமூகம் மற்றும் சாதியின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என யஷ் தயாள் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஸ்டோரியை நீக்கிய போதும், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பலரும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் அவரை, ரிங்கு சிங் அணுகிய விதத்துடன் ஒப்பிட்டும் வருவதாக தெரிகிறது.

அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13-வது லீக் போட்டியில் யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடி தந்தார் ரிங்கு சிங். அது இப்போது நினைவு கூறப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x