Published : 05 Jun 2023 07:52 AM
Last Updated : 05 Jun 2023 07:52 AM
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மைக்கேல் நேசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் 7-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தசைப் பிடிப்பு காரணமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரின் இறுதிப் பகுதியில் பெங்களூரு அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார். கடந்த சில நாட்களாக பந்து வீச்சு பயிற்சியில் ஜோஷ் ஹேசில்வுட் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டி தொடங்க இரு நாட்களே உள்ள நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
எனினும் வரும் 16-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தொடங்க உள்ள ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜோஷ் ஹேசில்வுட் முழு உடற்தகுதியை பெறும் வகையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மைக்கேல் நேசர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மைக்கேல் நேசர், ஆஸ்திரேலிய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். சமீபத்தில் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் கிளாமோர்கன் அணியில் இடம் பெற்றிருந்த மைக்கேல் நேசர் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் 14 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதில் யார்க்ஷயர் அணிக்கு எதிராக 32 ரன்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியதும் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT