Published : 02 Jun 2023 06:46 AM
Last Updated : 02 Jun 2023 06:46 AM
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எம்.தோனிக்கு மும்பை மருத்துவமனையில் முழங்கால் காயத்துக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி 20 தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் 41 வயதான தோனி இடது முழங்கால் காயத்துடன் விளையாடி இருந்தார். விக்கெட் கீப்பிங் பணியை அவர், திறம்பட கையாண்ட போதிலும் பேட்டிங்கின் போது ரன்கள் எடுக்க ஓடுவதில் சிரமங்களை சந்தித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் முழங்கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சையை விளையாட்டு மருத்துவ நிபுணரான தின்ஷா பர்திவாலா மேற்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்துக்கும் இதே போன்ற அறுவை சிகிச்சையை தின்ஷா பர்திவாலா வெற்றிகரமாக செய்திருந்தார்.
மருத்துவமனையில் தோனியுடன் அவரது மனைவி சாக் ஷியும் உடனிருந்தார். இரு நாட்கள் தோனி மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலையிலேயே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனியிடம் நான் பேசினேன். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை நடைபெற்றது என்பதை நான் விளக்க முடியாது. ஆனால் அவருக்கு, கீ-ஹோல் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் உரையாடும் போது தோனி நன்றாக இருந்தார்” என்றார். தோனி சிறிது காலம் ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், பழைய வேகத்துடன் ஓடுவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.
எந்த மாதிரியான சிகிச்சை?
தோனியின் முழங்கால் காயத்துக்கு கீ-ஹோல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இது ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் மற்றொரு பெயராகும். இந்த சிகிச்சை முறையானது முழங்கால் பகுதியை முழுவதுமாக திறக்காமல் சிறிய துளைகள் மட்டும் ஏற்படுத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT