Published : 04 Feb 2020 07:38 PM
Last Updated : 04 Feb 2020 07:38 PM
உருவ வடிவமைப்பில் பார்த்தவுடன் ஈர்த்துவிடும் ஒருவித நளினமும், வேறு எந்த இசைக் கருவிகளிலும் இல்லாத கம்பீரமும் ஒருங்கே கொண்ட, தந்திகளை மீட்டுவதன் மூலம் வாசிப்பைக் கேட்கும் இதயங்களை வசப்படுத்தும் இனிமையான இசைக்கருவிதான் வீணை. இதற்கு ருத்ர வீணை, ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என பல பெயர்கள் உள்ளன.
இந்திய இசையின் சிறப்பு வாய்ந்த பல நுட்பமான சங்கதிகளை வீணையில் அழகாக வாசிக்கலாம். பண்டைக் காலம் தொட்டே வீணை வாசிக்கப்படுகிறது. இதைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், பாகவதம் மற்றும் புராணங்களில் உள்ளன. பழங்காலத்தில் இதன் தோற்றமும், அமைப்பும் பல வகைகளில் இருந்துள்ளது. அக்காலத்தில் மீன், படகு, போன்ற வடிவங்களில் கூட வீணை செய்யப்பட்டுள்ளது. இது ருத்ர வீணை என அழைக்கப்படும்.
17-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் (1600- 1645) காலத்தில்தான் தற்போது நாம் காணும் வடிவத்தை வீணை அடைந்தது. கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை. இதை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை எனவும் கூறுவதுண்டு.
பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு இதற்கு 2010-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் வீணை செய்வதற்கு 40 வயதான பலா மரத்தின் அடி மரம் பயன்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர் வீணையின் எடை 7 கிலோ முதல் 8 கிலோ வரைதான் இருக்கும். எடை குறைவான வீணை என்பதே இதன் தனிச் சிறப்பு. இந்த வீணையில் நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதி தண்டி எனப்படும். இதன் வலது பக்கம் குடமும், மற்றொரு முனையில் (இடது புறம்) யாழியின் முகமும் அமைந்திருக்கும். யாழி முகத்துக்கு அருகில் உருண்டை வடிவில் அமைந்திருப்பது சுரைக்காய் எனப்படுகிறது.
வீணையின் குடம் போன்ற பகுதியைச் செய்ய பலா மரத்தை ஒரு பானையின் தடிமன் அளவுக்கு குடைந்து கொள்வார்கள். இதன் உள்ளே வெற்றிடமாக இருக்கும். இதன் மேல் பலகையில் பல ஒலித்துளைகள் போடப்பட்டிருக்கும். வீணையின் மிக முக்கியமான பாகமே பானை போன்ற குடம்தான். கம்பிகளை மீட்டும்போது இக்குடத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் இசை வெளிப்படும். குடம் மரத்தில் இருப்பதால் இசை நேர்த்தியாக வெளிப்படுகிறது.
மேலும் வீணையின் மேல் பலகையில் மாடச்சட்டம், பிரடைகள், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், மெட்டுகள், குதிரைகள், லங்கர், நாகபாசம், தந்திகள் என பல நுட்பமான பாகங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாழி முகம் ஆகிய பாகங்கள் உள்ள வீணை ஏகாந்த வீணை எனப்படும். ஒரே மரத்துண்டில் பாகங்களைத் தனித்தனியாகச் செய்து ஒன்றாகப் பொருத்துவது ஒட்டு வீணை எனப்படுகிறது.
இதில் மரத்தை அறுப்பதற்கு மட்டுமே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. பிற நுட்பமான கலைநயமிக்க வேலைப்பாடுகள் அனைத்தும் கைகளால் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணைகள் பலா மரத்தில் செய்யப்படுவதால் தனிச்சிறப்புடன் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூர் இசைக்கருவிகள் செய்வோர் தொழில் கூட்டுறவு சங்க வீணைப் பரிசோதகர் ஜி.லட்சுமணன் கூறியதாவது: பண்ருட்டியில் உள்ள பலா மரம்தான் வீணை செய்வதற்குச் சரியான மரம். அந்த மண்ணின் வாகு அத்தகைய மரத்தை வளர்த்தெடுக்கிறது. அந்த ஊர் பலா மரத்தில் பால் சத்து அதிகமாக இருக்கும். அதனால், மரம் கெட்டியாக இருப்பதுண்டு. எத்தனை ஆண்டு காலமானாலும் மரம் கெட்டுப் போகாது.
ஒரே மரத்தில் செய்யப்படும் ஏகாந்த வீணையில் உள்ள குடம், தண்டி, யாழி வளைவு ஆகியவை நன்கு தோண்டி எடுக்கப்படும். இதனால், இந்த வீணையின் எடை மிகக் குறைவாக இருக்கும். இந்த வீணையில் மொத்தம் 7 கம்பிகள் இருக்கும். இதில், முதல் இரு முறுக்குக் கம்பிகள் செம்பிலும் மற்ற கம்பிகள் இரும்பிலும் அமைக்கப்படும். இது ரூ.16,000 முதல் ரூ.40,000 வரை விற்கப்படுகிறது.
இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன என்றார்.
-வி.சுந்தர்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT