Published : 04 Feb 2020 06:17 PM
Last Updated : 04 Feb 2020 06:17 PM
கடந்த இருநூறு ஆண்டுகளில் மட்டும் சுமார் பத்து முறை நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1342-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பூகம்பம் தென்னகத்தையே குலுக்கியது. கேரளாவில் கொச்சி அருகே விபின் தீவு என்ற நிலத்திட்டு உருவானது. தென்னகம் முழுவதும் மிக பெரிய சேதங்களையும், சோகங்களையும் உருவாக்கிய இந்த நிலநடுக்கத்தின் போது சோழர்களின் கட்டடங்களில் சிறு சிராய்ப்பு கூட ஏற்படவி்ல்லை.
பெரிய கோயிலைப் பற்றி ஆய்வு செய்பவர்கள், இதன் உருவாக்கத்திற்காக பச்சைமலை பிராந்தியத்திலிருந்து பெரிய சிலைகளுக்கான கற்கள் கொண்டு வரப்பட்டன. கோயிலின் லிங்கத்திற்கான கல் திருவக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று கூறுகின்றனர்.
இயற்கையாக நடைபெறும் வேதி மாற்றங்களைச் சமாளிக்க திருச்சி மானமலையிலிருந்து உறுதியான கற்கள் கொண்டு வரப்பட்டன என்று தகவல்கள் வழங்குகிறார்கள். இந்த ஆயிரம் ஆண்டு இடைவெளியில் புயல், சூறாவளி, மழை, வறட்சி, கொதிக்கும் சூரிய வெப்பம் எவையுமே பெரிய கோயிலில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாமன்னன் ராஜராஜ சோழன் அற்புதமான கட்டட கலைஞர்களையும், மழைக்கு ஒதுங்கக்கூட பள்ளிக்கூடம் இல்லாத அந்தக் கால தொழில்நுட்ப வல்லுநர்களையும், பெயரும்- முகவரியும் தெரியாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கொண்டு உருவாக்கிய பெரிய கோயில் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது.
நமது பாரம்பரியத்தின் முன்னோடி தமிழர்களின் பேராற்றல், அவர்களின் இந்த சாதனைக்காக நம்மை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. பெரிய கோயில் கட்டடப் பணிகளில் 200 கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர். அமோகமாக மகசூல் தரும் 35 கிராமங்கள் பொறுக்கி எடுத்து தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் உள்ள நிலம் முழுவதும் பெரிய கோயில் வருமானத்துக்காக ஒதுக்கப்பட்டன. 5 கிராமங்கள் 1,000 ஏக்கருக்கு மேலேயும் மற்ற பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும் பெரிய கோயில் வருமானத்துக்கு என்று தம்மை ஈந்தன.
மாமன்னன் ராஜராஜன் தமது சாதனைகளுக்காக 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னும் இன்றும் உச்சிமோந்து பாராட்டப்படுகிறார். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் உலகில் பல பெரும் மன்னர்களுக்கும் கூட கிடைக்காத புகழ் மாமன்னன் ராஜராஜனுக்கு கிடைத்துள்ளது. சோழர்கள் காலத்தில் காவிரிக்கரையில் 108 சிவாலயங்கள் கட்டப்பட்டு பெரும்பாலானவை அழிந்து போன நிலையிலும், காலத்தால் வெல்ல முடியாத கோயிலாக நிலைத்திருப்பது பெரிய கோயில் மட்டுமே.
வரலாற்று வளர்ச்சியில் பிற்காலத்தில் வந்த மனிதர்கள் ஆராய்ந்து வெளியிட்டிராவிட்டால் பெரிய கோயிலைக் கட்டியது பூதம், காடுவெட்டிச் சோழன் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்திருப்போம், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூருக்கு வந்த ஜி.யூ.போப் என்ற அறிஞர் அவ்வாறுதான் சொன்னார்.
பெரிய கோயில் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது என்ற உண்மையை சுமார் 850 ஆண்டுகள் கழித்து 1886-ல் ஜெர்மன் நாட்டின் ஹீல்ஷ் என்பவர் சொன்னார். அங்கு வரையப்பட்ட ஓவியங்கள் 1931-ல் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு தீட்டப்பட்ட நாட்டிய சிற்பங்கள் 1956-ல் வெளிக்கொணரப்பட்டன.
ராஜராஜனின் மகத்தான வெற்றி இன்று வரை வியந்து பார்க்கப்படுகிறது. ராஜராஜனின் மகன் ராஜேந்திரச் சோழனின் வெற்றிகள் குறித்து ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில், தன் யானைகளை கப்பலில் ஏற்றிச் சென்று தென்பர்மாவையும், வட இந்தியா சென்று வங்காள மன்னனையும் தோற்கடித்தார் எனக் குறிப்பிட்டார் என்பதில் இருந்தே சோழ மன்னர்களின் படை பலம் விளங்குகிறது.
- வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார்
இராஜராஜம்- சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு என்ற நூலின் ஆசிரியர், தஞ்சாவூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment