Published : 30 May 2023 05:31 AM
Last Updated : 30 May 2023 05:31 AM

திருப்பதி | கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தர் பவனி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகள் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருப்பதி: திருப்பதி நகரின் பிரசித்தி பெற்றகோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பல்வேறு நடனங்களுடன் கலைஞர்கள் முன் செல்ல, ஜீயர்கள் வேத மந்திரங்கள் ஓத மாட வீதிகள் களைகட்டின.

மேலும், திரளான பக்தர்கள் கோவிந்தரை வழி நெடுக வழிபட்டனர். இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் நாளை (மே 31) முதல் ஜூன் 4-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

முதல்நாளில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணரும், 2-ம் நாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமியும், 3-ம் நாள் பத்மாவதி தாயார் தெப்பல் மீது ஊர்வலம் வர உள்ளார். ஜூன் 3-ம் தேதி இரவு கஜவாகனத்திலும், 4-ம் தேதி இரவு கருட வாகனத்திலும் தாயார் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு 5 நாட்களும் தினமும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மற்றும்ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x