Published : 27 May 2023 01:20 PM
Last Updated : 27 May 2023 01:20 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார் கோயிலிலுள்ள ஆகாச மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாசம் அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று சமயபுரம் மாரியம்மன், வளையல் மற்றும் மல்லிகைப் பூவுக்காக, இக்கோயிலில் 15-நாட்கள் வந்து தங்குவதை, திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். மேலும், இக்கோயிலில் மாரியம்மன் அருவமாக இருப்பதால், தீப வழிபாடு மட்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டு, கடந்த 24-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, (26-ம் தேதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், ஆகாச மாரியம்மன், வீற்றிருந்த கோலத்தில், திருநறையூர், ஸ்ரீ செங்கழுநீர் விநாயகர் கோயிலிருந்து வீதி உலாவாகப் புறப்பட்டு, நாச்சியார் கோயிலிலுள்ள இக்கோயிலுக்கு நேற்று காலை வந்ததைடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மல்லிகை பூ தூவி வணங்கினர்.
தீபம் மட்டுமே வைத்து வழிபடும் இக்கோயிலில், இந்த பெரிய திருவிழாவின் போது, சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வரும் 16-ம் தேதி வரை பல்வேறு அலங்காரத்தில் அந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். பிரதான நிகழ்ச்சியான அடுத்த மாதம் 4-ம் தேதி பெரிய திருவிழாவும், 7-ம் தேதி அம்மன் சமயபுரத்திற்குத் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT