Published : 24 May 2023 07:23 PM
Last Updated : 24 May 2023 07:23 PM

கும்பகோணம் | திங்களூரிலுள்ள பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாதன்கோயிலிலுள்ள செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகன்நாதப்பெருமாள் கோயில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமி மடத்தின் நிர்வாகத்தின் கீழுள்ளது. இக்கோயிலில் இன்று ரூ. 1 கோடி மதிப்பில் திருப்பணிகள் முடிந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த 22-ம் தேதி ஸ்ரீ விஷ்வச்சேனா ஆராதனம், அங்குரார்ப்பணமும், மகாசாந்தி ஹோமமும், உற்சவர் திருமஞ்சனமும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மூலஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

பிரதான விழாவான இன்று அதிகாலை சுப்ரபாதம்,புண்யாக வாசனம், யாத்ராதானமும், கடம் புறப்பாடும், இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், மூலஸ்தான மகா ஸம்ப்ரோஷணமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்த ஜன சேவையும், இரவு ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது. இதில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வானமாமலை திருமட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதே போல் திருவையாறு வட்டம், திங்களூரிலுள்ள ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடைபெற்றது. பிரதான விழாவான மூலவர் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், மூலவருக்கும் மற்றும் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விரு கும்பாபிஷேகங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x