Published : 24 May 2023 07:09 PM
Last Updated : 24 May 2023 07:09 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில்களில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.
ஆண்டு தோறும் இக்கோயில்களில் வைகாசிப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தின் முன்பு ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரிஸ்வரர் உள்பட பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 28-ம் தேதி ஒலைச்சப்பரமும், 30-ம் தேதி திருக்கல்யாணமும், அடுத்த மாதம் 1-ம் தேதி கட்டுத்தேரோட்டமும், 3-ம் தேதி 7 திருச்சுற்று இறைவனும், இறைவியும் உட்சுற்று உலாவும் நடைபெறுகிறது.
இதே போல் இந்தக் கோயிலில் வரும் 14-ம் தேதி தொடங்கும் முத்துப்பந்தல் விழாவையொட்டி, கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில் திருஞானசம்பந்தருக்கு, இறைவனும், இறைவியும் காளை வாகனத்தில் காட்சியளித்து, திருமுலைப்பால் வழங்கி, இரவு திருஞானசம்பந்தருக்கு பொற்தாளம் அளிப்பதுடன் விழா தொடங்குகிறது.
வரும் 15-ம் தேதி திருஞானசம்பந்தருக்கு இறைவன் வழங்கிய முத்துக்கொண்டை, முத்துக்குடை, முகத்துச்சின்னங்களுடனும், இரவு முத்துதிருவோடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலாவும், 16-ம் தேதி காலை 7 மணிக்கு திருஞானசம்பந்தர் மடத்திலிருந்து முத்துப்பல்லக்கில் எழுந்தருளி திருமேற்றழிகையிலுள்ள கைலாசநாதர் கோயில், திருசக்திமுற்றத்திலுள்ள சத்திவனேஸ்வரர் கோயிலுக்கு சென்று, அங்கிருந்த புறப்பட்டு பட்டீஸ்வரத்திலுள்ள மூலவரை தரிசனம் செய்யும் போது, அங்குள்ள மூலவர்களான ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரிஸ்வரர் சுவாமிகள் முத்து விமானத்தில் திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்து, அந்த முத்துபந்தல் நிழலில் அவரது வீதியுலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ம.ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல், நவக்கிரஹங்களில் ஒன்றான ராகு பகவான் அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழாவை யொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தின் முன் கிரிகுஜாம்பிகை-பிறையணியம்மன் சமேத நாகநாத சுவாமி உள்பட பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி திருக்கல்யாணமும், அடுத்த மாதம் 2-ம் தேதி சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் துணை ஆணையர் தா.உமாதேவி, உதவி ஆணையர் எஸ்.சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT