Published : 12 Oct 2017 10:57 AM
Last Updated : 12 Oct 2017 10:57 AM
பாஸ்ராவில், ஒரு குடும்பம் வறுமையின் கொடுமைக்கு இரையாகிக்கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் நான்காவது பெண் குழந்தையாக 712-ம் வருடத்தில் ராபியா பிறந்தார், அவர் குழந்தைப் பருவத்திலேயே அடிமையாக விற்கப்பட்டார். ஆனால், பின்னாளில் சூபி ஞானியாகப் பெரும் புகழ்பெற்றார்; அவருடைய சமகாலத்து ஞானிகளால் பெரிதும் மதிக்கப்பட்டார். 752-ம் வருடத்தில் மறைந்த இந்த ராபியா பஸ்ரி, பெண்களின் வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு முன்மாதிரி.
ஓர் இருண்ட இரவில் அந்தக் குடும்பத்தில் ஒளியாய்ப் பிறந்தார் ராபியா. விளக்கேற்றுவதற்கு எண்ணெய்கூட இல்லாத அளவுக்கு வீட்டில் வறுமை நிலவியது. பக்கத்து வீட்டிலிருந்து சிறிது எண்ணெய் வாங்கி வரச் சொல்லி தந்தையிடம் பிரசவத்தில் உடனிருந்த சகோதரி வேண்டினார். ஆனால், கடவுளைத் தவிர வேறு யாரிடமும் உதவி கோரமாட்டேன் என்று அதை அவர் நிராகரிக்கிறார்.
கடவுளுக்கு விருப்பமானவர்
கனத்த மனதுடன் தூங்கிக்கொண்டிருந்தவரின் கனவில் முகமது நபி (ஸல்) அவர்கள் தோன்றி, “கவலைப்படாதே.. உன் மகள் கடவுளுக்கு மிகவும் விருப்பமானவள். அவள் பின்னாளில் உலக மக்களுக்கு நல்வழி காட்டுபவளாகத் திகழ்வாள்” என்று சொன்னார். அந்தக் கனவு அவருக்கு மகிழ்ச்சியளித்தது. வறுமையுடனேயே நாட்கள் மெல்ல மெல்லக் கழிந்தன.
தந்தையின் மறைவு, பாஸ்ராவைத் தாக்கிய பஞ்சம் என அடுத்தடுத்து வீசிய இன்னல் சூறாவளி, ராபியாவைச் சகோதரிகளிடமிருந்து பிரித்து, திருடர்கள் கையில் ஒப்படைத்தது. குழந்தையை வைத்து என்ன செய்ய முடியும், எனவே, இரக்கமற்ற ஒரு செல்வந்தரிடம் ராபியா அடிமையாக விற்கப்பட்டாள்.
அவளுடைய வாழ்வில் துன்பங்களும் அதனால் ஏற்பட்ட துயரங்களும் தொடர்ந்துகொண்டிருந்தன. அவள் கடவுள்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பையும் நம்பிக்கையையும் அந்தத் துன்பங்களால் விலக்கிவைக்க முடியவில்லை. பகல்பொழுது கடினமான வேலைப் பளுவில் கழியும். இரவுப் பொழுது நெக்குருகும் பிரார்த்தனையில் கரையும். பல கடினமான நாட்களை நோன்பு தந்த தைரியத்தில் ராபியா கடந்தாள்.
விடுவித்த எஜமானன்
ஓர் இரவு அவள் மெய்மறந்த நிலையில் “என் ஆண்டவரே! உமது கட்டளைகளை நிறைவேற்றி என் முழு இருதயத்தோடும் உமக்கு ஊழியஞ்செய்வதே என் விருப்பம். ஓ என் கண்களின் ஒளியே. நான் சுதந்திரமாக இருந்திருந்தால், நாள் முழுவதும் இரவும் பகலும் பிரார்த்தனையில் செலவிடுவேன். நீ என்னை ஒரு மனிதனுக்கு அடிமைப்படுத்தியபோது, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிரார்த்தித்துக்கொண்டு இருந்ததைக் கண்ட அந்தச் செல்வந்தன் மனம் இளகி ராபியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவித்தான்.
ராபியா, பாலைவனத்துக்குச் சென்று இறை வழிப்பாட்டுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அங்கு ஹசன் பஸ்ரி அவருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ராபியா தன்னைப் பற்றி எதுவும் எழுதி வைக்கவில்லை. சூபி ஞானியான ஃபரித் அல்-தின் அத்தார்தான் இவரது ஆரம்பகால வாழ்வைப் பற்றி எழுதிவைத்து இருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும், ராபியாவுக்குக் கடவுள் மீதான அன்பும் வறுமையும் தன்னல மறுப்பும் மட்டுமே உற்ற தோழர்களாக இருந்தன. இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபட்டிருப்பார் ராபியா. இவரின் புகழுடன் சேர்ந்து சீடர்களும் பெருகினர். ராபியாவை மணம் முடிக்க வேண்டி, பாஸ்ராவின் அமீர் உட்படப் பலர் வந்தனர். கடவுளின் மீது அன்பு கொள்வதைத் தவிர வேறு எதற்கும் தன் வாழ்நாளில் நேரமில்லை என்று சொல்லி, அவர்களின் வேண்டுகோள்களை நிராகரித்தார்.
துன்பங்களும் கடவுளின் கொடை
ஒரு நாள் மாலிக் பின் தினார் வந்திருக்கும்போது, பிய்ந்த பாயில், கல்லைத் தலையணையாகக் கொண்டு படுத்திருந்த ராபியாவைக் கண்டு மனம் வருந்தி, தனக்கு வேண்டிய செல்வந்தர்களிடம் சொல்லி அவருக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர முன்வந்தார். ஆனால் ராபியா அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “ஓ மாலிக்! எனக்குக் கொடுப்பவரும், உமக்குக் கொடுப்பவரும், உமது நண்பர்களுக்குக் கொடுப்பவரும் வெவ்வேறானவர் அல்ல. வறியவர்களின் வறுமையையும் செல்வந்தர்களின் செல்வத்தையும் அவர் மறப்பதில்லை. மறக்காத ஒன்றை அவருக்கு நினைவூட்ட வேண்டிய தேவையுமில்லை. எனது இந்த நிலை அவரது விருப்பம் என்பதால், இது எனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது” என்று சொன்னார்.
இன்பங்கள் மட்டுமல்ல துன்பங்களும் கடவுளின் கொடைதான் என்பது ராபியா நமக்குக் கற்றுத் தரும் பாடம். தான் இறந்தால், யாருக்கும் சொல்லி அனுப்பாமல், தன் பழைய உடையுடன் புதைக்குமாறு வேண்டியிருந்தார். ஆனால், அவரது மரணத் தருவாயில், அரசர் உட்பட நாடே திரண்டிருந்தது. தேவதைகளுக்கு வழிவிட்டு, எல்லோரும் வெளியே செல்லும்படி அவர் வேண்டியதற்குச் செவிமடுத்து அனைவரும் வெளியே சென்று கதவைப் பூட்டினர். “ஓ ஆன்மாவே அமைதியில் ஓய்வெடுக்க உன் கடவுளிடம் திரும்பிச் செல்” என்று குரல் கேட்டது. சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றவர்களை அவரது நிரந்தர ஓய்வுதான் வரவேற்றது.
ராபியாவின் வார்த்தைகளில் சொல்வது என்றால் “மரணம் என்பது நண்பர்களை இணைக்கும் பாலம். அந்த நேரம் வரும்போது, பாலத்தைக் கடந்து நம் நண்பரைச் சந்திப்போம்”.
(மெய்ஞானிகளின் வருகை தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT