Published : 17 Jul 2014 10:27 AM
Last Updated : 17 Jul 2014 10:27 AM

அவ்வையார் நோன்பு

தமிழ்ப் புலவர் அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் ஒரே தாலுகாவில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. இங்குள்ள தோவாளை தாலுகாவில் ஆண், பெண் பாகுபாடின்றிப் பலரது பெயரும்கூட அவ்வையார்தான்!

சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு அவ்வை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர்.

அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையார் வழிபாடு செய்வார்கள். இந்த ஆலயத்தை ஏராளமான நாவல் மரங்கள் சூழ்ந்து நிற்கின்றன.

அவ்வையாருக்கும், முருகனுக்கும் இடையே நடந்த ‘சுட்டப் பழம்’ விளையாட்டும் இங்குதான் நடைபெற்றதாக செவிவழிச் செய்தி உள்ளது.

அவ்வையார் கோயில்கள் குறித்து விளக்குகிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் பத்மநாபன்.

“தாழாக்குடி நெல்லியடி அவ்வையைப் போல் ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தலிலும் அவ்வைக்குக் கோயில் உள்ளது. அவ்வையார் இங்கு வைத்து சேர, சோழ, பாண்டியர் முன்னிலையில் ஒரு திருமணத்தை நடத்தினாராம்.

அதில் மூன்று வேந்தர்களும் தங்குவதற்கு தனித்தனி பந்தல் போடப்பட்டது. அதனால்தான் இந்த ஊருக்கு முப்பந்தல் எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் இங்கு சொல்லப்படுகிறது.

இதேபோல் அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.

குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் ஒரு அறையில் பெண்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்துவார்கள். பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது.

கூடவே பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை எதுவும் இல்லை” என்கிறார் பத்மநாபன்.

- தி இந்து ‘ஆடி மலர்’ புத்தகத்திலிருந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x