Published : 27 Oct 2017 11:24 AM
Last Updated : 27 Oct 2017 11:24 AM
கங்கைக்கு பாகீரதி எனும் பெயர் அமைந்த கதை தெரியும்தானே.
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம் புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.
குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள். ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள் அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே இல்லை.
பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம் செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள். உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார். சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார்.
அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன் சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர் என்கிறது புராணம். அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு ‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது, பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து, அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.
பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு, எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ, அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில், உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும் புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன், இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத் தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT