Published : 16 May 2023 06:04 AM
Last Updated : 16 May 2023 06:04 AM

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்மன் சிரசு. படங்கள்: வி.எம்.மணிநாதன்

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் `அம்மன் சிரசு' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்தமாதம் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,கடந்த 15 நாட்களாக கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 6 மணிக்கு அம்மன் சிரசு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோயிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

கோயில் வளாகத்தில் அம்மன் உடலில் பொருத்தப்பட்ட சிரசு.

வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் நேற்று குடியாத்தம் வந்து, விழாவில் கலந்துகொண்டனர்.

சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு,கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையொட்டி, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், கூடுதல் எஸ்.பி.க்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.விழாவையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x