Published : 05 Oct 2017 10:05 AM
Last Updated : 05 Oct 2017 10:05 AM
ந
பிகளாரும் அவருடைய தோழர்களும் ஒரு பயணத்தின் வழியில், கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்க நேர்ந்தது. நபிகளார் ஓய்வெடுப்பதற்காகத் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவந்தார்.
தோழர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளனவா என்பதைக் கேட்டறிந்தார். சிறிது நேரம் சென்றிருக்கும். குளிர் அதிகமாக இருந்தது. குளிருக்கு இதமாகப் பக்கத்தில் யாரோ தீ மூட்டியிருந்தார். நபிகளார் அங்கு சென்றார். நெருப்பின் அருகில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபிகளார் பேச்சுக் கொடுத்தார். சட்டென்று அவர்களின் முகத்தில் பதற்றம்.
நெருப்புக்குப் பக்கத்தில் ஒரு எறும்புப் புற்று இருந்தது. புற்றைச் சுற்றியும் நிறைய எறும்புகள். இதைக் கண்டுதான் நபிகளார் பதறிப் போனார்.
பாவம்..! அந்த எறும்புகள் நெருப்பில் விழுந்து இறந்துவிடும் அல்லவா? அனலில் சிக்கி அவை பொசுங்கிப் போகுமே? அந்த எண்ணம் நபிகளாரைக் கவலையடையச் செய்தது. எறும்புகளுக்கு ஆபத்து! இறைவனின் சின்னஞ்சிறிய படைப்பான எறும்புகளுக்கு ஆபத்து!
“இந்த நெருப்பை இங்கே யார் மூட்டியது?” நெருப்புக்குப் பக்கத்தில் இருந்த மனிதரிடம் நபிகளார் கேட்டார்.
அந்த மனிதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் நபிகளாரைக் குழப்பத்துடன் பார்த்தார். “இறைவனின் தூதரே, நா...ன்... நான்...தான்.. தீ... மூட்டினேன்... குளிருக்காக!” என்றார்.
“சீக்கிரமாகத் தீயை அணையுங்கள்.. ம்... சீக்கிரமாகத் தீயை அணையுங்கள்!” என்று நபிகளார் பதறினார். இதைக் கண்ட அந்த மனிதர், ஒரு போர்வையை எடுத்தார். தீயின் மீது மூடினார். தீயும் அணைந்தது.
அதன் பிறகுதான் அந்த மனிதருக்கு விஷயம் விளங்கியது. எறும்புப் புற்றின் அருகில் நெருப்பு மூட்டியது தவறு என்று புரிந்தது. அதிலிருந்து, அந்த மனிதர், நெருப்பை மூட்டும் போதெல்லாம் மிக மிகக் கவனமாக இருந்தார். சுற்றி ஏதாவது உயிரினங்கள் உள்ளனவா என்று பார்ப்பார். அதன் பிறகுதான் தீ மூட்டுவார்.
எறும்புகள்கூட நெருப்பில் சிக்கி அழிவதை நபிகளார் பொறுத்துக்கொள்ளவில்லை. இறைவனின் எந்தப் படைப்பும் துன்பமடைவதை நபிகளார் எப்போதும் விரும்பியதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT