Published : 11 May 2023 05:01 AM
Last Updated : 11 May 2023 05:01 AM
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் இக்கோயிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருக்ஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கான பிரம்மோற்சவமும், இதே கோயிலில் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும் புகழ்பெற்றவை.
அந்த வகையில், இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ம் நாளான நேற்று நடைபெற்றது. காலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, 7 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தெற்கு மாட வீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு என கோயிலைச் சுற்றிய 4 தெருக்களிலும் பார்த்தசாரதி பெருமாள் திருத்தேரில் வீதி உலா வந்தார். அவரை பக்தர்கள் வழி முழுவதும் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பெண்கள் கும்மியடித்து பார்த்தசாரதி பெருமாளை வரவேற்றனர். காலை 8.15 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது.
இதேபோல், திருத்தேரின் பின்னால் செல்லக் கூடிய வகையில் சிறுவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய ரதமும் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தின்போது, இந்து சமய அறநிலையத் துறை (சென்னை 2) இணை ஆணையர் ரேணுகாதேவி, கோயில் துணை ஆணையர் பெ.க.கவெனிதா, சிறப்புப் பணி அலுவலர்கள், காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறை சார் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெண்ணெய்த் தாழி கண்ணன்: பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் திருவிழாவான இன்று (மே 11) வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, நாளை காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. மே 13-ம்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT