Published : 04 May 2023 06:16 AM
Last Updated : 04 May 2023 06:16 AM
கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நேற்று முன்தினம், கூத்தாண்டவருக்கு தாலி கட்டி ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள், நேற்று காலை தேரோட்டம் முடிந்த நிலையில், அரவான் பலியிடப்பட்டதும் தாலி அறுத்து, கதறி அழுது, விதவைக் கோலத்துடன் வீடு திரும்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதையொட்டி கூத்தாண்டவர் கண் திறத்தல் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்து, கைகளில் வண்ண வளையல்கள் பூட்டி சிகையலங்காரம் செய்து தலை நிறைய பூச்சூடி, மணப்பெண் அலங்காரத்தில் கோயிலுக்குள் சென்று கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். கோயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட திருநங்கைகள், இரவில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், திருநாவலூர் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் கூவாகம் பகுதியின் சுற்றுவட்டார மக்கள்ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தேர் முக்கிய வீதி வழியாக சென்று பந்தலடியை அடைந்ததும் அரவான் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவானுக்கு தாலி கட்டி இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைத்திருந்த திருநங்கைகள், களப்பலி கண்ட அரவானை கண்டு தாலி அறுத்து, நெற்றியில் இட்ட திலகத்தை அழித்தும், வளையல்களை உடைத்தெறிந்தும் கதறி அழுதனர். பின் அருகில் உள்ள குளங்களில் குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து விதவைக் கோலத்துடன் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.
நாளை தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. கூவாகம் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் மேற்பார்வையில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT