Published : 03 May 2023 03:47 PM
Last Updated : 03 May 2023 03:47 PM

திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் - ‘ஐயாரா, ஐயாரா’ என தேரின் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்

திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில், தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான, ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத ஐயாறப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

29-ம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் மரகதலிங்கத்துக்குப் பால், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரில் அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சிறப்பலங்காரத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயாரா ஐயாரா எனக் கோஷமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும், தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. 7-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்குப் புறப்பட்டு செல்கிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தருமபுர ஆதீனம் 27-வது குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள், கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x