Published : 02 May 2023 06:22 AM
Last Updated : 02 May 2023 06:22 AM

மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: மலையில் இருந்து நாளை கள்ளழகர் புறப்படுகிறார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முன்னதாக நேற்றிரவு பக்தர்கள் சீர்வரிசைகளுடன் வந்து கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்தனர். படம்: நா தங்கரத்தினம்

மதுரை: மதுரையில் இன்று நடைபெறும் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாநகர் முழுவதும் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா ஏப்.23-ல்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

கோயிலின் மேற்காடி வீதியில்இதற்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் ரூ.200, 500 கட்டணச் சீட்டுபெற்றவர்கள், முக்கியப் பிரமுகர்கள் உட்பட 6 ஆயிரம் பேர், அனுமதிச் சீட்டு இன்றி 6 ஆயிரம் என சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேற்குக் கோபுரம் வழியாக முக்கியப் பிரமுகர்களும், வடக்குக் கோபுரம் வழியாக ரூ.200, 500 கட்டணச் சீட்டு பெற்றவர்களும், தெற்குக் கோபுர வாசல் வழியாக பிற பக்தர்களையும் அனுமதிக்க கோயில் நிர்வாகம், காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி கி.சங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேரில்ஆய்வு செய்து, சில ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில், திருக்கல்யாணத்தை முன்னிட்டு சித்திரை வீதிகளில் ஏற்கெனவே இருக்கும் கண்காணிப்பு கோபுரங்கள் தவிர கூடுதலாக கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரை, ஆடி வீதிகளில் பக்தர்கள் வரிசையாகச் செல்வதற்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருக்கல்யாண மேடைப் பகுதி உட்பட ஆடி வீதிகளில் நேற்று வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். திருக்கல்யாண நிகழ்வுக்கு நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மஞ்சள்நிறச் சீட்டு வைத்திருப்போர் மேலஆவணி மூல வீதியிலும், ரோஜாநிறம் பெற்றவர்கள் வடக்கு ஆவணிமூல வீதி, மாநகராட்சி தரைத்தளம்நிறுத்துமிடத்திலும், நீல நிறம் வைத்திருப்போர் தெற்கு ஆவணிமூல வீதியிலும் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் வருவோர் கிழக்கு, மேற்கு, தெற்கு மாசி வீதிகளில் போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் சுமார் 3,500 போலீஸார் திருக்கல்யாணப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டை மாவட்டங்களில் இருந்தும் 1,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாமுடியும் வரை இவர்கள் மதுரையில்தான் பணியில் இருப்பர் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.

மதுரை புறப்படும் கள்ளழகர்: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று (மே 1) தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

2-ம் நாளான இன்று (மே 2) திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. 3-ம் நாள்இரவு 7 மணிக்கு மேல் அழகர்கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் மதுரைக்குப் புறப்படுகிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x