Published : 02 May 2023 06:04 AM
Last Updated : 02 May 2023 06:04 AM

வேதகிரீஸ்வரர் கோயிலில் பஞ்சரத தேரோட்டம்: கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்த பக்தர்கள்

செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுகுன்றத்தில் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஐந்து ரதங்கள் அணிவகுத்து வர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் 7-ம் நாளான நேற்று பஞ்சரதம் எனப்படும் தேரோட்ட உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில், கடந்த 25-ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று பஞ்சரதம் எனப்படும் தேரோட்ட உற்சவம் நடைபெற்றது.

இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனியே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர், முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட உற்சவத்தின்போது, திருக்கழுகுன்றத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. எனினும், கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதனால், தேர் விரைவாக நிலையை வந்தடைந்தது. தேரோட்ட உற்சவத்தையொட்டி நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், போலீஸாரின் சரியான திட்டமிடல் இல்லாததால் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் முடங்கின. நடந்து செல்லும் பக்தர்களும் சாலையில் நடக்க முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்தனர். போக்குவரத்து நெரிசல் குறித்து மாவட்ட எஸ்பியின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

போலீஸார் தேவையான முன்னேற்பாடுகளை சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x