Published : 30 Apr 2023 06:34 PM
Last Updated : 30 Apr 2023 06:34 PM
பழநி: கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் இன்று (ஏப்.30) வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று அதிகாலை முதலே கேரளா, ஆந்திரா உட்பட வெளி மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோயிலுக்கு ரோப் கார், வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக, சுவாமி தரிசனம் முடித்த பக்தர்கள் மலைக்கோயிலை விட்டு இறங்க ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலைக்கோயிலுக்கு செல்ல வசதியாக, பாத விநாயகர் கோயிலில் இருந்து பேட்டரி கார் மூலம் ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். பழநி கிரிவீதி, சந்நிதி வீதி, அடிவாரம் பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வந்த வாகனங்களால் பழநி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT