Published : 21 Sep 2017 10:48 AM
Last Updated : 21 Sep 2017 10:48 AM
நம் நாட்டு மக்களுக்குத் தியானம் புதிய விஷயமல்ல. தியானம் செய்வது மனதுக்கும் உடம்புக்கும் நல்லது; உடம்பு இறுக்கம் நீங்கிப் புத்துணர்வு பெறும்; மனதில் அமைதி நிலவும் என்பதை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டு முனிவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போதுதான் மேலைநாட்டு ஆய்வாளர்கள் மனதைக் குவித்து தியானம் செய்கிறவர்களுக்குப் புறப்புலன்களால் உணர முடியாத, பிரக்ஞை கடந்த மூளைச் செயல்பாடுகள் அதிக அளவில் புலப்படுகின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதன் காரணமாக தியானம் செய்கிறவர்களால் தமது உடலை முழுப் பிரக்ஞையுடன் ஆட்படுத்த முடிகிறது.
1983-ம் ஆண்டில் பெஞ்சமின் லைபட் என்ற நரம்பியல் விஞ்ஞானி, தனிநபர்கள் ஒரு முடிவெடுக்கும்போது அதில் எந்த அளவுக்கு முழுப் பிரக்ஞையுடன் செயல்படுகிறார்கள் என்பதை ஆய்வுசெய்தார். அவருடைய சோதனையின்போது தனிநபர்கள் ஒரு சுவிட்சின் முன்னால் அமரவைக்கப்பட்டார்கள். எப்போதெல்லாம் அதை அழுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அழுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது. அவ்வாறு அவர்கள் அதை அழுத்தும்போது அவர்களுடைய மூளையின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. சுவிட்சை அழுத்து என்று மூளை ஆணையிடுவதற்கும், விரல்கள் அந்த ஆணையை நிறைவேற்றுவதற்குமிடையிலான கால இடைவெளி கணக்கிடப்பட்டது.
மூளை உத்தரவிட்டதற்கு 200 மில்லி விநாடிகள் கழித்தே விரல்கள் அந்த உத்தரவை நிறைவேற்றுகின்றன. ஆனால், மூளையில் உத்தரவு உருவாவதற்கு 150 மில்லி விநாடிகளுக்கு முன்பே அதற்கான தீர்மானம் உருவாகிவிடுகிறது. உடலின் உறுப்புகளை நாம் நினைக்கிற அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்தவோ இயக்கவோ முடியாது என்பதே இதன் பொருள். ஒவ்வொரு உறுப்பும் நரம்பும் தசைநாரும் ஓரளவுக்கு சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரம் பெற்றுள்ளன. தியானம் செய்வதால் மேற்சொன்ன மில்லி விநாடிகளின் எண்ணிக்கையில் ஏதாவது கூடவோ குறையவோ செய்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.
மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் ஒத்திசைவு
அண்மையில் லைபட்டின் சோதனைகள் மேலும் திறன் மேம்பட்ட கருவிகளின் உதவியுடன் திரும்பச் செய்துபார்க்கப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 11பேர் தியானப் பயிற்சி பெற்றவர்கள். 46 பேர் தியானம் செய்யும் பழக்கமில்லாதவர்கள். எல்லோரும் ஒரு கடிகாரத்தில் கண் வைத்தவாறு, விரும்பும் போதெல்லாம் ஒரு சுவிட்சை அழுத்தினார்கள். சோதனையின் முடிவில் தினமும் தியானம் செய்யும் வழக்கமுள்ள குழுவினர் மூளையில் ஆணை பிறந்ததற்கு 149 மில்லி வினாடிகளுக்குப் பிறகே விரல்களை இயக்கினார்கள். தியானப் பயிற்சியோ பழக்கமோ இல்லாதவர்களுக்கு அந்தக் கால இடைவெளி 68 மில்லி விநாடிகளாக இருந்தது.
தியானம் செய்பவர்கள் தமது அடி மனதுடன் அதிக அளவில் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள் என்பதை இச் சோதனைகள் காட்டுகின்றன. அவர்களுடைய ஒவ்வொரு செயலும், இயக்கமும் மூளையில் உருவாவதையும், அவை புலனுறுப்புகளுக்கு மாற்றப்படுவதையும் மற்றவர்களைவிட முன்னதாகவே அவர்கள் உணர்கிறார்கள்.
அனிச்சையும் பிரக்ஞையும்
இத்தகைய ஆய்வுகள், தியானம் செய்கிறவர்களின் அவயங்கள் நினைவு சம்பந்தப்படாத மூளைப் பகுதிகளுடனும் மேம்பட்ட இணைப்புகளைப் பெற்றிருப்பதாக நிரூபிக்கின்றன. அப்பகுதிகள் அனிச்சைச் செயல்களை ஆளுகிறவை. நடப்பது, உட்காருவது, தலையைத் தடவுவது போன்ற செயல்கள் அனிச்சையாகவே நிகழ்கின்றன. யாராவது, “இப்போ எதுக்குத் தலையைத் தடவினாய்?” என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்கள். நாம் பெரும்பாலும் அன்றாடத்தில் செய்யும் காரியங்களை விழிப்பின்றி அனிச்சையாகவே செய்கிறோம்.
தியானம் என்பது கடவுள் பக்தி சம்பந்தப்படாததாகவும் இருக்கலாம். ஆய்வாளர் குழுவிலிருந்தவர்களில் சிலர் கடவுளை நம்பாதவர்கள்தான். அவர்கள் தமது மனதுக்குப் பிடித்தமான ஒரு நபரை அல்லது பொருளைத் தமது மனக்கண்ணுக்கு முன் வரவழைத்துத் தியானம் செய்தார்கள். அவர்களுக்கும் உடலில் நல்ல விளைவுகள் தோன்றின. முறையாகத் தியானம் செய்தவர்களின் உடலில் வேதனைகளை உண்டாக்கும் இன்டர்லியூகின் என்ற சுரப்பின் அளவு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. அது உடலில் புற்றுநோய் தோன்ற வாய்ப்புள்ளதைக் காட்டும் உயிரியல் சுட்டி ஆகும்.
தியானம் செய்பவர்கள் அடிமனதுடன் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள்
தியானத்தைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் செய்யலாம்
தியானம் உடல் வேதனைகளையும் நோய் வாய்ப்புகளையும் குறைக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT