Published : 26 Apr 2023 05:12 AM
Last Updated : 26 Apr 2023 05:12 AM
அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா நேற்று இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் கொண்டாடப்பட்டது. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில் சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார்.
இவரது 2,532-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை) உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் நேற்று கொண்டாடப்பட்டது. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் குறித்த வேத செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் இவரது ஜெயந்தி விழா அமைந்துள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபாள், வாராணசி, அசாம் - காமாக்யா, ராணிபூல், சிக்கிம், பூரி,புது டெல்லி, பஞ்சாப், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆதிசங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியன நடைபெற்றன.
திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ஆதிசங்கரருக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்தார். முன்னதாக ஆச்சாரியரின் உற்சவ மூர்த்தி கபிலேஸ்வர சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் அங்கு நேற்று நடைபெற்ற விழாவுக்கு தலைமை தாங்கினார். ஆதிசங்கரர் பிறந்தநண்பகல் வேளையில் சங்கர விஜயத்தின் பாடல்கள் பாடப்பட்டன. காஞ்சி மடத்தின் பாடசாலைகளில் குருகுல முறை மூலம் நான்கு வேதங்களைப் பயின்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஸ்ரீ விஜயேந்திரர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவிஜயேந்திரர் பேசியதாவது: சனாதன தர்மத்தை, அத்வைத தத்துவத்தை நமக்கு போதித்தவர் ஆதிசங்கரர். அவரது போதனைகள் தேசிய ஒருமைப்பாட்டை மட்டுமல்லாது முழு உலகத்தையும் ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டுள்ளன. அவர் தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அவரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம் சமூக நலனுக்காக நாடு முழுவதும் கலாச்சாரம், கல்வி மற்றும் மருத்துவத் துறையில் பல சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் நிர்வாகிகள், வேத பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT