Published : 21 Apr 2023 06:23 PM
Last Updated : 21 Apr 2023 06:23 PM
பழநி: பழநி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே ரூ.32 கோடியில் புதிதாக ரோப் கார் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் சேகர்பாபு அறிவிப்பால் பக்தர்கள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். மலைக் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் வசதி உள்ளது. இதில் ரோப் கார் சேவை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழநி மலையின் இயற்கை எழிலை ரசித்தபடி செல்ல விரும்பும் பக்தர்கள் ரோப் காரை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது செயல்பாட்டில் உள்ள ரோப் காரில் ஒரே நேரத்தில் மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு 4 பெட்டிகள், கோயிலில் இருந்து மலையடிவாரத்துக்கு 4 பெட்டிகள் என மொத்தம் 8 பெட்டிகள் இயக்கப்படுகின்றன.
ஒரு பெட்டியில் 3 பேர் வீதம் அமர்ந்து செல்ல முடியும். பழநி மலையை போல், பழநி சிவகிரிபட்டியில் கொடைக்கானல் சாலையில் இடும்பன் மலை உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து இடும்பன் கோயிலுக்கு மொத்தம் 540 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.எனவே, பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கும் எளிதில் சென்று வர ரோப் கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள், உள்ளூர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு பழநி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.32 கோடியில் புதிய ரோப் கார் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் பக்தர்கள்,உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அறிவிப்போடு இல்லாமல் விரைவில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்தி நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT