Published : 20 Apr 2023 03:07 PM
Last Updated : 20 Apr 2023 03:07 PM
புதுச்சேரி: புஷ்கரணி வரும் பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் பந்தல் வசதி, நீராடும் பக்தர்கள் ஆடை மாற்ற ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகளும், 50 மொபைல் டாய்லெட்டுகளும் அமைக்கப்படும். 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் வல்லவன் கூறினார்.
நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, அந்தந்த ராசிக்குரிய ஆறுகளில் புஷ்கரணி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். புஷ்கரணி என்பதற்கு ஆறுகளில் புனித நீராடுதல் என்பது பொருளாகும். புஷ்கரணி விழாவின்போது, சம்பந்தப்பட்ட ஆறுகளில் மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசிக்குரிய ஆறுகளான கங்கை, சங்கராபரணி ஆகிய ஆறுகளில் புஷ்கரணி விழா நடத்தப்படுகிறது. இதன்படி, புதுச்சேரியில் ஓடுகின்ற சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அருகே புஷ்கர விழா வரும் 22ம் தேதி துவங்கி, மே 3ம் தேதி வரை 12 நாட்கள் முதல்முறையாக நடக்கிறது.
இவ்விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொது மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் விழாவிற்கு வருபவர்கள் பாதுகாப்பாக போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்ல முக்கிய சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகள் என அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வல்லவன் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அவருடன் காவல்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, வில்லியனூர் சப்-கலெக்டர் ரோமில், எஸ்பிக்கள் மோகன்குமார், நித்யா, தாசில்தார் கார்த்திகேயன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், கோயில் சிறப்பு அதிகாரி சீதாராமன் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது புஷ்கரணி விழா ஏற்பாடுகள், நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் வல்லவன் கூறியதாவது: "புதுச்சேரியில் முதல் முதலாக புஷ்கரணி விழா இங்கு நடைபெறுகிறது. அரசு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதற்காக 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சங்கராபரணி ஆற்றில் இறங்கி குளிக்க படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆடைகள் மாற்றுவதற்கு ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்க முடியோதோருக்கு ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. 50 மொபைல் டாய்லெட்டுகள்,பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பந்தல்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக முதலுதவி மருத்துவ முகாம் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்கள், ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொது மக்களின் குடிநீர் வசதிக்காக 5 டேங்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் வசதிக்காக நகர பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள சமூக விரோதிகளால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT