Published : 21 Sep 2017 10:51 AM
Last Updated : 21 Sep 2017 10:51 AM
இ
ருளிலிருந்து ஒளி; தீமையிலிருந்து நன்மை. மனிதன் இங்கேயே தெய்வீகத் தன்மையை அடைய முடியும் என்பதையும் நினைவூட்டும் விழாவே நவராத்திரி. ஓரறிவு கொண்ட உயிரிலிருந்து தொடங்கி ஈரறிவு, மூன்று அறிவு என்று ஒன்பதாவது படியில் தெய்வங்களை வைப்பதன் மூலம் இதுவே உணர்த்தப்படுகிறது. நவராத்திரி நாட்கள் முழுவதும் நம்மைப் படைத்துக் காக்கும் பெண்மையை வணங்கும் முகமாக பெண் தெய்வங்களை வணங்குகிறோம். சக்தி, பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாகவும் சிவன் விழிப்பாகவும் கருதப்படுகிறார். துர்க்கை சக்தியின் உச்ச வடிவாகவும் மொத்த உலகத்துக்கும் உணவளிப்பவளாகவும் இருக்கிறாள். துர்க்கையின் சக்தியைப் போற்றி, அவளது ஆசீர்வாதத்தை பெறும் நாட்களாக நவராத்திரி உள்ளது.
‘துர்கா துர்காதி நாசினி’ என்ற சமஸ்கிருதப் பாடலுக்கேற்ப அனைத்து அல்லல்களையும் அறுத்துக் களைபவள் துர்க்கை. ஆனந்தம், வளம், நம்பிக்கை, ஞானம், வெற்றி, பரிபூரண அமைதியைத் தருபவள்.
இந்தியாவைப் பொறுத்தவரை மதம் கடந்து அனைத்து தொழிற்பிரிவினருக்கும் உற்சாகம் தரும் தினங்களாக நவராத்திரி உள்ளது. வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் இந்நாட்களில் புத்துயிர்ப்பைப் பெறுகின்றன.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், இரண்டாவது பகுதி லக்ஷ்மிக்கும் மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அளித்து படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது. துர்க்கை அரக்கனை அழித்த நாளான இத்தினத்தில் எந்த முயற்சியைத் தொடங்கினாலும் வெற்றிபெறலாம் என்பது நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT