Published : 14 Apr 2023 06:20 AM
Last Updated : 14 Apr 2023 06:20 AM
கோவையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் இருந்து, மேலே வெள்ளியங்கிரி மலைக்கு பாதை செல்கிறது.
7 மலைகளைக் கடந்து அதன் உச்சியில் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் வெள்ளியங்கிரி ஆண்டவர். இறை ஆற்றல், உடல் பலம், மன பலம் உள்ளவர்கள் பூலோக கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு தங்கு தடையின்றி சென்று வரலாம்.
வெள்ளியங்கிரி மலை சர்வ லோகங்களிலும் புகழ் பெற்ற மலையாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியர் தவம் செய்த மலை. அகஸ்தியர் பரம்பரையில் வரும் ஞானிகள் வழிபடும் மலை. 4 யுகங்களுக்கு முன்னர், வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்கமாக சிவபெருமான் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், மேகங்கள் சூழ்ந்து வெள்ளிப் போர்வை போர்த்தியது போல காணப்படுவதால், இந்த மலை வெள்ளியங்கிரி மலை என அழைக்கப்படுகிறது.
வாழ்க்கை சக்கரத்தை உணர்த்தும் ஏழு மலை: வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் குறித்து அறநிலையத்துறையினர், அர்ச்சகர்கள், சிவ பக்தர்கள் கூறியதாவது: அடிவாரப் பகுதியான பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர், விநாயகர் மற்றும் காவல் தெய்வங்களை வணங்கிய பின்னர் பக்தர்கள், 4 அடி மூங்கில் தடியுடன் மலை ஏற தொடங்குவர். முதல் மலை பிரணவ சொரூப சூட்சமத்தை உணர்த்துகிறது. பெரிய பெரிய படிக்கட்டுகளைக் கொண்ட முதல் மலையை கடந்தால் வெள்ளை விநாயகர் கோயிலை அடையலாம்.
இரண்டாவது மலையின் தொடக்கம் இதுவாகும். இரண்டாவது மலை சுவாதிஷ்டானத்தை உணர்த்துகிறது. பாம்பாட்டி சுனை இங்கு உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு, முருகப் பெருமான் காட்சி தந்த இடம் இந்த இரண்டாவது மலை என கூறப்படுகிறது. பக்தர்களின் தாகத்தை தீர்க்க இங்கு உள்ள பாம்பாட்டி சுனையில் எந்நேரமும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். பெரிய படிக்கட்டுகள், பாறையில் செதுக்கிய படிக்கட்டுகள், ஆங்காங்கே சிறு சிறு சமவெளிகள் ஆகியவற்றை கடந்தால் இரண்டாவது மலை நிறைவு பெற்றதாக அர்த்தம்.
3-வது மலை மணி பூரகத்தை உணர்த்துகிறது. அக்னி அம்சமான இந்த மலையில், கைத்தட்டி சுனை காணப்படுகிறது. 4-வது மலை அனாகதத்தை உணர்த்துகிறது. ஒட்டர் சித்தர் சமாதி இந்த மலையில் காணப்படுகிறது. அடுத்து 5-வது மலை விசுத்தி நிலையை உணர்த்துகிறது. வனவாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது. அவர்களின் நினைவாக இங்கு பீமன் களி உருண்டை மனை, பீமன் பள்ளத்தாக்கு போன்றவை காணப்படுகிறது. 6-வது மலை ஆர்க்னேயே நிலையை உணர்த்துகிறது.
சேத்திழை குகை, ஆண்டி சுனை ஆகியவை இங்கு காணப்படுகின்றன. ஆண்டி சுனையில் பக்தர்கள் குளித்தால், பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும், நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். கடும் சிரமத்துடன் 5 மலைகளைக் கடந்து வரும் பக்தர்கள், 6-வது மலையில் உள்ள ஆண்டி சுனையில் குளிக்கும் போது, அதுவரை உடலில் இருந்து வந்த அசதி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். அடுத்த மலையை எந்தவித அசதியும் இன்றி ஏறி விடலாம்.
7-வது மலை சகஸ்சகாரத்தை உணர்த்துகிறது. செங்குத்து வடிவில் இந்த மலை காணப்படுகிறது. இங்கு சுயம்பு லிங்க உருவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சி அளிக்கிறார். ஏழு மலைகளைக் கடந்து வரும் பக்தர்கள் ஏழாவது மலையின் உச்சியில் உள்ள சுயம்பு லிங்க ஆண்டவரை கண்டவுடன் கண்ணில் கண்ணீர் பெருக தரிசனம் செய்கின்றனர்.
மலையேற்றம் எப்படி? - வெள்ளியங்கிரி மலை மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் அமைந்து உள்ளதால், காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
யானை, செந்நாய், ஓநாய், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, பாம்பு போன்றவற்றின் நடமாட்டம் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக, இரவு நேரங்களில் தான் மக்கள் மலை ஏற தொடங்குகின்றனர்.
இந்த மலையை ஏற மூங்கில் தடி மிகுந்த உதவியாக இருக்கும். வன விலங்குகள் நிறைந்த மலைப் பாதையில் சிவபெருமானை நினைத்துக் கொண்டு ‘‘ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா’’ என்ற முழக்கத்துடன் பக்தர்கள் மலை ஏறுவர். முதல் இரண்டு மலை பக்தர்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தும். அந்த அளவுக்கு கரடு முரடான பாதைகள், மரங்களின் வேர்கள், கற்கள் போன்றவை காணப்படும்.
இந்த முதலிரண்டு மலைகளை கடந்து விட்டால், அடுத்த ஐந்து மலைகளை சுலபமாக கடந்து விடலாம். நடந்து செல்லும் பக்தர்களின் வேகத்தை பொறுத்து மூன்றரை முதல் ஐந்து மணி நேரத்தில் மலை ஏறி விடலாம். இந்த மலைப்பாதை அரிய பல மூலிகை செடிகளை கொண்டுள்ளது.
மலை ஏறி தொடும் தூரத்தில் மேகங்கள் கொண்ட 7-வது மலை உச்சியை அடைந்து சூரிய உதயத்தை காண்பது கண் கொள்ளா காட்சி ஆக இருக்கும். மலையில் ஏறி, இறங்கிய பக்தர்களின் உடலில் புது வித்தியாசத்தை உணர்வர். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைப்பாதையின் நுழைவாயில் அருகே வனத்துறையினர் சோதனை நடத்தும் இடம் உள்ளது.
மலை ஏற செல்லும் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்த பின்னர், பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர். கோவை மட்டும் இன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சித்ரா பெளர்ணமியில் திரளும் பக்தர்கள்: இந்த மாதத்தில் அனைத்து நாட்களும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவர். குறிப்பாக, சித்ரா பெளர்ணமியன்று பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்கும். சித்ரா பெளர்ணமி தினத்தில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சமேத மனோன்மணி தாயாருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்துவர்.
சித்திரகுப்த வழிபாடும் நடத்தப்படும். இதேபோல், மலை உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்துவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT