Published : 10 Apr 2023 05:38 AM
Last Updated : 10 Apr 2023 05:38 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விழாவில் பங்கேற்றோர்.

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஏப்ரல் 2-ம் தேதி குருத்தோலை பவனியும், 6-ம் தேதி பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சியும், 7-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலமும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் இயேசு உயிர்ப்பு பெருநாள்(ஈஸ்டர்) சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா
பேராலய கலையரங்கத்தில் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில்
பங்கேற்றபேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார்

‘பாஸ்கா ஒளி’ - இதன் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடைபெற்றது. இதில் இயேசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘பாஸ்கா ஒளி’ ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலயஅதிபர் இருதயராஜ் அடிகளார் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து வந்தார். பின்னர் நடைபெற்ற பிரார்த்தனையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மெழுகுவத்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.

வாணவேடிக்கை: நள்ளிரவு 12 மணியளவில் வாணவேடிக்கை மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், மேல் மற்றும் கீழ் கோயில், விண்மீன் ஆலயம், மாதா கோயில் ஆகியவற்றில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழ், ஆங்கிலம், கொங்கனி, மலையாளம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x