Published : 07 Apr 2023 02:48 PM
Last Updated : 07 Apr 2023 02:48 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருப்புறம்பியம் பகவதி அய்யனார் கோயில் செல்வதற்காக மண் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கும்பகோணம் வட்டம், திருப்புறம்பியத்திலுள்ள பகவதி அம்மன் கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். சோழர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய, ராஜராஜசோழனின் தாத்தாவாகிய விஜயாலயா சோழன், கட்டிய பகவதி அய்யனார் கோயிலில், 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. அதன் எதிரில், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடத்தில் பகவதி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.
திருப்புறம்பியத்திலிருந்து, சுமார் 650 மீட்டர் தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு, செல்லும் பக்தர்களுக்குச் சாலை வசதி இல்லாததால், அங்குச் செல்ல சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகனிடம் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இன்று திருப்புறம்பியம் முதல் பகவதி அய்யனார் கோயிலுக்கு செல்லும் 650 மீட்டர் தூரத்திற்குச் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் அங்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விரைவாகவும், தரமாகவும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அவருடன் கிராம நிர்வாக அலுவலர் இ.இசக்கியம்மாள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.கண்ணன், திமுக ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜன், அதிமுக முன்னாள் நிர்வாகி பாண்டியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT