Published : 05 Apr 2023 06:28 AM
Last Updated : 05 Apr 2023 06:28 AM
பழநி: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்துக்கு முன்னதாக நேற்று காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு விநாயகர், அஸ்திரத்தேவர் தேர்கள் முன்செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரை கிரி வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தர்கள் முழக்கமிட்டனர். தேரோட்டம் தொடங்கும் முன்பாக 15 நிமிடம் சாரல் மழை பெய்தது.
கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, கந்த விலாஸ் உரிமையாளர் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப் பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 1,700 போலீஸார் பணியில் ஈடுபட்டனர். தேர் நிலையை அடைந்தவுடன் இரவு 9 மணிக்கு சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT