Published : 04 Apr 2023 03:03 PM
Last Updated : 04 Apr 2023 03:03 PM
மதுரை: கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் செருப்பின்றி பாதங்களை தரையில் வைக்க முடியாத அளவுக்கு சுட்டுப் பொசுக்குகின்றன. அதனையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் தென்னை நார் விரிப்புகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறை கோயிலாகும். இங்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு திருப்பதியைப்போல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. உள்ளூர் மக்கள் ஆயிரக் கணக்கானோர் வந்து தரிசித்து செல்கின்றனர். மேலும், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாக்களும் உலகப் புகழ்பெற்றவை.
நடப்பாண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. முக்கிய விழாக்களான திருக்கல்யாணம் மே 2-ம் தேதி செவ்வாய்க்கிழமையும், அதற்கு அடுத்த நாள் மே 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளன. கோடை விடுமுறை மற்றும் திருவிழாவையொட்டி, நடப்பாண்டிற்கான பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதங்களை பாதுகாப்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில், தேவையான இடங்களில் ரூ.3.80 லட்சம் செலவில் புதிய தென்னைநார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நண்பகல் நேரத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்கள் உடல் சூட்டை தணிக்கும் வகையில் நீர் மோர் வழங்கப்படுகிறது.
இது குறித்து மீனாட்சி அம்மன் கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் கூறுகையில், "சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் தகரப்பந்தல் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. பக்தர்கள் நடந்து செல்லும்போது வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நான்கு ஆடி வீதிகளிலும் தரைப்பகுதியில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் தொடங்கவுள்ளன. கோயிலினுள்ளே 10 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT