Published : 04 Apr 2023 06:05 AM
Last Updated : 04 Apr 2023 06:05 AM
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த மாதம்28-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, 2-ம் நாள் வெள்ளி சூரிய வட்டம், வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்னவாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 3-ம் நாள் அதிகார நந்தி சேவைநடைபெற்றது. தொடர்ந்து, சவுடல்விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையிலேயே கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில், கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை 6.30 மணி அளவில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதையடுத்து, காலை 7.25 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் `கபாலி', `கபாலி' எனும் சிவநாமத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவ வாத்தியங்கள் முழங்க கபாலீஸ்வரர் தேர் புறப்பட்டது. பஞ்ச மூர்த்தி புறப்பாட்டுடன் 4மாட வீதிகளிலும் தேரில் கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வலம் வந்து அருள்பாலித்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘நமச்சிவாயா’ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, பிற்பகல் 1 மணிஅளவில் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேரில் எழுந்தருளிய சுவாமியை தரிசித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, 4 மாட வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்து வந்தனர். ராமகிருஷ்ண மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்துமயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. அவ்வழியாக வரும்வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். தேரோட்டத்தையொட்டி மயிலாப்பூர் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சியளித்தது.
இன்று (ஏப்.4) அறுபத்து மூவர் விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருவார்கள். இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வெள்ளி விமானத்தில் வரும் திருக்காட்சியைக் காணவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, ஏப்ரல் 6-ம் தேதி திருக்கல்யாண நிகழ்வும், ஏப்ரல் 8-ம் தேதி விடையாற்றித் தொடக்க விழாவும் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT